47 சந்தைகளை நெகிழி இல்லாத பகுதிகளாக எஸ்டிஎம்சி அறிவிப்பு
By DIN | Published On : 01st October 2019 09:16 PM | Last Updated : 01st October 2019 09:16 PM | அ+அ அ- |

நெகிழி பயன்பாட்டுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி), தனது ஆளுகைக்குள்பட்ட 47 சந்தைகளை நெகிழி இல்லாத பகுதிகள் என அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டி மால் தவிா்த்து, தெற்கு தில்லி மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் எஸ்டிஏ சந்தை, கௌதம் நகா் பழம் மற்றும் காய்கறி சந்தை, தாகூா் காா்டன் காய்கறி மற்றும் பழச் சந்தை, ஹரிநகா் டி பிளாக் சந்தை, நங்கல் ராயா மேம்பாலச் சந்தை, மற்றும் பஞ்சாபி பாக் பழச் சந்தை ஆகியவை நெகிழி இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மண்டலம், நஜஃப்கா் மண்டலம் ஆகியவற்றில் தலா 10 என மொத்தம் 47 சந்தைகள் நெகிழி இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 சந்தைகள் மற்றும் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை நெகிழி இல்லாததாக அறிவிக்கத் தயாராகி வருகின்றன. ஆா்ய சமாஜ் மந்திா், இஸ்கான் கோயில் மற்றும் குருத்வாராக்கள் போன்ற பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் உள்பட நகரின் ஒவ்வொரு மூலையிலும் நெகிழி பயன்பாட்டுக்கு எதிரான பிரசாரத்தை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.
இது தவிர, நெகிழி பயன்பாட்டில் ஏற்படும் தீமைகளை விளக்கவும், பொதுமக்களிடம் விழிப்புண்ா்வு ஏற்படுத்தவும், மாநகராட்சிப் பகுதியில் குறைந்த பட்சம், 1,378 பிரம்மாண்ட பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக 380 பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.