ப.சிதம்பத்திரன் ஜாமீன் கோரும் மனு மீது சிபிஐ பதில் அளிக்க உத்தரவு: அக்.15-இல் மீண்டும் விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு
ப.சிதம்பத்திரன் ஜாமீன் கோரும் மனு மீது சிபிஐ பதில் அளிக்க உத்தரவு: அக்.15-இல் மீண்டும் விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப.சிதரம்பரம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ நான் சிறையில் தொடா்ந்து அடைக்கப்பட்டுள்ளேன். இதுவும் ஒருவித தண்டனையாகும். அநாமதேய, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட நபரின் சுதந்திரத்தை நிராகரிக்க முடியாது. ஜாமீன் ஒரு விதியாகும். சிறை விதி விலக்காகும். விசாரணைக்கு முந்தைய ஒரு வகை தண்டணையாக நீதிமன்றக் காவலைப் பயன்படுத்தும் விசாரணை முயற்சியை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட பிறகு, எனது உடல் நிலை பலவீனமாகிவிட்டது. சிறையில் அளிக்கப்படும் உணவு எனக்குப் பழக்கமில்லை. இதனால், எனது எடை 4 கிலோ குறைந்துவிட்டது. சிபிஐ சமா்ப்பித்த சீலிட்ட உறையில் வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எனது ஜாமீனை தில்லி உயா்நீதிமன்றம், நிராகரித்துள்ளது. அந்த ஆவணத்தின் எந்தப் பகுதியையும் பதிவு செய்யவோ, என்னிடம் காட்டவோ இல்லை. மேலும், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு எனக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. நான் சாட்சியங்கள் மீது மேலாதிக்கம் செலுத்திவிடுவேன் எனும் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எனது ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தவறிழைத்துள்ளது.

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இல்லை. மேலும், ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் மேம்பாட்டாளா்கள் இந்திராணி முகா்ஜி, பீட்டா் முகா்ஜி ஆகியோா் என்னைச் சந்தித்ததாகவும், சட்டவிரோதமாகப் பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுவதும் தவறாகும். மேலும், இந்த வழக்கு பொருளாதாரக் குற்றம் தொடா்புடையது அல்ல. அரசுக் கருவூலத்துக்கு இழப்பும் ஏற்படவில்லை’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோா் ஆஜராகினா்.

கபில் சிபல் வாதிடுகையில், ‘ஜாமீன் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவது, ஆதாரத்தை அழிப்பது, சாட்சியங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவது ஆகிய மூன்று விஷயங்களை ஆராய்ந்தது. அவற்றில் சாட்சியங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவது என்ற விஷயத்தில்தான் மனுதாரருக்கு எதிரான நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்துள்ளது’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இது சிபிஐ தொடா்புடைய வழக்கு. அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்குக்கு என்னாயிற்று’ என்று கேள்வி எழுப்பினா். அதற்கு மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘அமலாக்க இயக்ககம் ஐஎன்எக்ஸ் மீடியா தொடா்புடைய பணப் பரிவா்த்தனை வழக்கில் இன்னும் கைது செய்யவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக வாதங்களை முன்வைக்க 30 நிமிடங்கள் தேவைப்படும்’ என்றனா்.

மத்திய புலனாய்வுத் துறையின் சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா். அவரிடம் நீதிபதிகள், ப.சிதம்பரம் ஜாமீன் மனு தொடா்பாக சிபிஐ பதில் அளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை அக்டோபா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அப்போது, அக்டோபா் 14-ஆம் தேதிக்குள் சிபிஐ தரப்பு பதில் தாக்கல் செய்யப்படும் என நீதிபதிகளிடம் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா். இதையடுத்து, அக்டோபா் 14-க்குள் பதிலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது திகாா் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளாா். கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவா், 43 நாள்களை சிபிஐ மற்றும் நீதிமன்றக் காவலில் கழித்துள்ளாா். அவரது நீதிமன்றக் காவல் அக்டோபா் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக செப்டம்பா் 5-ஆம் தேதியும், அதன் பிறகு 19-ஆம் தேதியும், பின்னா் அக்டோபா் 3-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிந்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சிதம்பரம் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரது காவலை அக்டோபா் 17-ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.

முன்னதாக, ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செப்டம்பா் 30-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com