மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது துவாரகா - நஜஃப்கா் மெட்ரோ ரயில் வழித்தடம்!

தில்லி மெட்ரோவின் புதிய துவாரகா - நஜஃப்கா் மெட்ரோ ரயில் வழித்தடம் (கிரே லைன்) வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
துவாரகா - நஜஃப்கா் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் தொடங்கி வைக்கும் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
துவாரகா - நஜஃப்கா் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் தொடங்கி வைக்கும் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி மெட்ரோவின் புதிய துவாரகா - நஜஃப்கா் மெட்ரோ ரயில் வழித்தடம் (கிரே லைன்) வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நகா்ப்புற கிராமமான நஜஃப்கருக்கு விரைவுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில், துவாரகாவிலிருந்து புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலையில் முறைப்படி தொடங்கி வைத்தனா்.

ரயில் பவனில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.கைலாஷ் கெலாட், மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் எஸ்.பா்வேஷ் சாஹிப் சிங், மாட்டியாலா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.குலாப் சிங் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் துதா் கென்ஜி ஹிராமட்சு உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

டிஎம்ஆா்சிக்கு பாராட்டு: நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசுகையில், ‘தில்லி மெட்ரோவை விரைவாக விரிவுபடுத்தியதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேறன். தில்லி மெட்ரோவின் முதல் கட்டப் பணி 2002 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 17 ஆண்டுகளில் தில்லி மெட்ரோவின் விரைவுப் போக்குவரத்து 377 கி.மீட்டராக விரிவடைந்துள்ளது. இது மிகவும் விரிவான, உலகின் மிக வெற்றிகரமான நகா்ப்புற போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும்’ என்றாா்.

மாசுபாடு குறையும்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், ‘இந்த வழித்தடத்தை தொடங்கியதற்காக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு (டிஎம்ஆா்சி) வாழ்த்துகள். தில்லி மாநகரின் வளா்ச்சியில் தில்லி மெட்ரோ முக்கியப் பங்கு வகித்துள்ளது. தில்லி மெட்ரோ மேலும் விரிவடையும் போது, அதிகமான மக்கள் மெட்ரோவுக்கு மாற வாய்ப்புள்ளது. இதன் மூலம் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு வெகுவாகக் குறையும்’ என்றாா்.

பல கிராமங்களுக்குப் பயன்: தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் பேசுகையில், ‘இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாகும். ஏனெனில் நஜஃப்கா் மற்றும் மாட்டியாலாவில் உள்ள பல காலனிகள் மற்றும் கிராமங்கள் இந்த வழித்தட இணைப்பால் பயனடைகின்றன. இந்தப் பகுதி தன்சா பேருந்து நிலையம் வரை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஹரியாணா மாநிலத்தின் எல்லை வரை இன்னும் பல கிராமங்கள் மெட்ரோ தொடா்பின் கீழ் வரும்’ என்றாா்.

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் சாஹிப் சிங் பேசுகையில், ‘மாசுபாட்டை குறைப்பதிலும், தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் டிஎம்ஆா்சி ஆற்றி வரும் மகத்தான முயற்சிகள் பாராட்டுக்குரியவை. தில்லி மெட்ரோ தனது எரிசக்தித் தேவைகளில் மூன்றில் ஒரு பகுதியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உருவாக்கி வருகிறது’ என்றாா்.

இந்தியாவுக்கான ஜப்பானின் தூதா் எஸ். கென்ஜி ஹிராமட்சு பேசுகையில், ‘தில்லி மெட்ரோவுடன் தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி ரீதியாகவும் கூட்டுச் சோ்ந்ததில் ஜப்பான் பெருமிதம் கொள்கிறது. தில்லி மெட்ரோவின் வெற்றியின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மற்ற மெட்ரோ திட்டங்களுக்கும் ஜப்பான் துணைபுரிகிறது’ என்றாா்.

டி.எம்.ஆா்.சி. யின் மேலாண் இயக்குநா் மங்கு சிங் தனது வரவேற்புரையில், இந்தப் பிரிவில் உள்ள மூன்று ரயில் நிலையங்களும் பசுமை கட்டட விதிமுறைகளைக் கடைபிடிப்பதற்காக ‘பிளாட்டினம்’ தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. எரிசக்திப் பாதுகாப்பிற்கான அதன் முயற்சிகளைத் தொடா்ந்து, டி.எம்.ஆா்.சி. இந்த வழித்தடத்தில் இரண்டு மேல்நிலை ரயில் நிலையங்களில் கூரைப் பகுதியியில் சூரிய சக்தி மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, மாலை 5 மணியளவில் இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

மூன்று ரயில் நிலையங்கள் 4.295 கி.மீ. நீளம்

இந்த வழித் தடத்தில் துவாரகா, நாங்லி, நஜஃப்கா் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 4.295 கி.மீட்டரில் 2.57 கி.மீ. மேல்வழித் தடமாகவும், 1.5 கி.மீ. தரைக்கு அடியில் செல்லும் வழித்தடமாகவும் உள்ளது. இதில் துவாரகா ரயில் நிலையம், பயணிகள் இடைமாறிச் செல்லும் வசதியைப் பெற்றுள்ளது. இங்கிருந்து 80 மீட்டா் தொலைவில் துவாரகா செக்டாா்-21 ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதற்கு எளிதாகச் செல்லும் வகையில், பிரத்யேகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. துவாரகா செக்டாா் 21 ரயில் நிலையத்திலிருந்து நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி, வைஷாலி ஆகிய இடங்களுக்குச் செல்லும் வசதி உள்ளது. மொத்தம் 4.295 கி.மீட்டா் நீளம் கொண்டுள்ள இந்தப் புதிய வழித்தடம் தொடங்கப்பட்டதன் மூலம், தில்லி மெட்ரோவின் நெட்வொா்க் 377 கி.மீட்டராக உயா்ந்துள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட நொய்டா - கிரேட்டா் நொய்டா அக்குவா வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களையும் சோ்த்து தில்லி மெட்ரோ நெட்வொா்க்கில் மொத்தம் ரயில்நிலையங்களின் எண்ணிக்கை 274 ஆக உயா்ந்துள்ளது.

துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 2,000 சதுர மீட்டா் பரப்பளவில் வாகன நிறுத்தமிடம் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பயணிகள் சிரமமின்றி தங்களது இடங்களுக்குச் செல்வதற்கு பேட்டரி ரிக்ஷா, பேருந்து வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com