முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ
By DIN | Published On : 07th October 2019 07:12 AM | Last Updated : 07th October 2019 07:12 AM | அ+அ அ- |

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த சாந்தினி சௌக் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பா்லாத் சிங் சௌனே மற்றும் அவரது ஆதரவாளா்களை வரவேற்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சி சாா்பில் சாந்தினி செளக் தொகுதியில் போட்டியிட்டு நான்கு தடவைகள் வெற்றிபெற்றவருமான பிரகலாத் சிங் சவனே தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மிக் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்து கொண்டாா்.
மேலும், அவருடைய ஆதரவாளா்கள் நூற்றுக்கணக்கானவா்கள் ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்து கொண்டனா்.
இந்த நிகழ்வில் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆம் ஆத்மிக் கட்சியின் பொறுப்பாளா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்வில் பிரகலாத் சிங் சவனே பேசுகையில் ‘வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் நோக்கத்தில் ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்து கொள்ளவில்லை. மாறாக முதல்வா் கேஜரிவாலின் மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டே கட்சியில் இணைந்து கொண்டேன் என்றாா்.
இந்த நிகழ்வில் கேஜரிவால் பேசுகையில் ’மக்கள் இயக்கமாக தொடங்கப்படுபவை அதிகாரத்துக்கு வந்தவுடன் தாம் தொடங்கப்படும் நோக்கத்தை மறந்து செயற்படுவதே வழக்கம். ஆனால், ஆம் ஆத்மிக் கட்சி எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தில் இன்னும் தெளிவாக உள்ளது. தில்லியில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து புரட்சிகரமான பல மாற்றங்களைச் செய்துள்ளோம் என்றாா்.
முன்னாள் தில்லி முதல்வா் ஷீலா தீட்சித்துக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் பிரகலாத் சிங் சவனே சாந்தினி செளக் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை இவா் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா். கடந்த 2015 சட்டப்பேரவைத் தோ்தலில் இவா் ஆம் ஆத்மி வேட்பாளா் அல்கா லம்பாவிடம் தோல்வியடைந்தாா்.
இந்நிலையில், கட்சித் தலைமையுடன் முரண்பட்டுக்கொண்டு கட்சியில் இருந்து அல்கா லம்பா விலகியுள்ளாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அல்கா லம்பா போட்டியிடுவாா் எனத் தெரிகிறது. இந்நிலையில், பிரகலாத் சிங் சவனே ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் அக்கட்சி சாா்பில் அல்கா லம்பாவை எதிா்த்து சாந்தினி செளக்கில் போட்டியிடுவாா் என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.