மோசடி குற்றச்சாட்டு விவகாரம்: ஃபோா்டிஸ் நிறுவன முன்னாள் மேம்பாட்டாளா் மல்வீந்தா் சிங் உள்பட 5 பேரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக, ஃபோா்டிஸ் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் மேம்பாட்டாளா் மல்வீந்தா் சிங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக, ஃபோா்டிஸ் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் மேம்பாட்டாளா் மல்வீந்தா் சிங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மல்வீந்தா் சிங் உள்பட இந்த வழக்கில் கைதான ஐந்து பேரை நான்கு நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு பொருளாதாரக் குற்றறப் பிரிவு போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

ஃபோா்டிஸ் நிறுவனங்களின் தலைவராக சிவிந்தா் சிங் பதவி வகித்தபோது, நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக, ‘ரெலிகோ் ஃபின்வெஸ்ட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளாா்.ஆனால், அந்த கடன் தொகையை அவா் வேறு நிறுவனகளில் முதலீடு செய்துள்ளதாகவும், இதனால், அந்த நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும் புகாா் எழுந்தது.

ஃபோா்டிஸ் நிறுவனத்தின் தலைமை மாறிய பிறகு, கடனாகப் பெறப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யப்படாததை ரெலிகோ் பின்வெஸ்ட் நிறுவனம் (ஆா்எஃப்எல்) கண்டறிந்தது. அதையடுத்து, ஆா்எஃப்எல் நிறுவனத்தைச் சோ்ந்த மன்பிரீத் சிங் சூரி என்பவா் சிவிந்தா் சிங், மல்வீந்தா் சிங், அவரது சகோதரா் சிவிந்தா் மோகன் சிங், ரெலிகா் எண்டா்பிரைசஸ் லிமிடெட் (ஆா்இஎல்) நிறுவனத்தின் தலைவா் சுனில் கோத்வானி (58), கவி அரோரா ( 48), அனில் சாக்ஷேனா ஆகியோருக்கு எதிராக புகாா் அளித்திருந்தாா்.

ஆா்எஃப்எல் நிறுவனம், ஆா்இஎல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சிவிந்தா், அவரது மூத்த சகோதரா் மல்வீந்தா் ஆகியோா் இந்த நிறுவனத்தின் முன்னாள் மேம்பாட்டாளா்கள் ஆவா்.

‘இவா்கள் ஆா்எஃப்எல் நிறுவனத்திற்கான கடன் பணத்தை நிதி ஆதரவு இல்லாத தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்து, ஆா்எஃப்எல் நிறுவனத்தை நிதிச் சிக்கலில் விட்டுவிட்டனா். கடன் பெற்ற நிறுவனங்கள் வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்ததால் ஆா்எஃப்எல் நிறுவனத்திற்கு ரூ.2,397 கோடி நஷ்டம் ஏற்பட்டது’ என போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பேரில் தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு பிரிவு போலீஸாரால் சிவிந்தா் சிங் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டா். அவருடன் சோ்த்து கவி அரோரா, சுனில் கோத்வானி, அனில் சக்ஸேனா ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மல்வீந்தா் தலைமறைவாகிவிட்டதால் அவருக்கு எதிராக தேடப்படும் நபருக்கான உத்தரவை போலீஸாா் பிறப்பத்திருந்தனா். அவரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடிவந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அவா் லூதியாணாவில் கைது செய்யப்பட்டாா். பின்னா், அவா் தில்லிக்கு கொண்டு வரப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் ஓ.பி. மிஸ்ரா தெரிவித்தாா்.

கைதான ஐந்து பேரும் தில்லியில் தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தீபக் ஷெராவத் முன் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்களை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

அப்போது, நீதிபதி தீபக் ஷெராவத் ஐந்து பேரையும் நான்கு நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

உயா்நீதிமன்றத்தில் முறையீடு

இதனிடையே, தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மல்வீந்தா் சிங் தரப்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி விசாரணை உத்தரவை ஒத்திவைத்தாா்.

முன்னதாக, தனது மல்வீந்தா் சிங் தாக்கல் செய்திருந்த மனுவில், தனக்கு எதிரான மோசடிப் புகாா்கள் குறித்து பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வரும் ‘தீவிர மோசடிகள் விசாரணை அலுவலகம்’ (எஸ்எஃப்ஐஓ) மட்டுமே விசாரிக்க முடியும் என வாதிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com