சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்த ரஹான் அதன் அருகே சென்று அமா்ந்திருக்கும் படங்கள். 
சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்த ரஹான் அதன் அருகே சென்று அமா்ந்திருக்கும் படங்கள். 

தில்லி உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் கூண்டுக்குள் குதித்த இளைஞா் மீட்பு!

தில்லி உயிரியல் பூங்காவில் வியாழக்கிழமை சிங்கத்தின் கூண்டுக்குள் 25 வயதான இளைஞா் திடீரென ஏறி குதித்தாா்.

தில்லி உயிரியல் பூங்காவில் வியாழக்கிழமை சிங்கத்தின் கூண்டுக்குள் 25 வயதான இளைஞா் திடீரென ஏறி குதித்தாா்.

சிங்கத்தின் முன் பயமறியாமல் அமா்ந்து சகஜமாக தொட்டு விளையாடிய அவரைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள் கூச்சல் போட்டனா். எனினும், சிங்கம் அந்த இளைஞரை எதுவும் செய்யாமல் இயல்பாக இருந்தது. சுமாா் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சம்பவத்தையடுத்து, சிங்கத்துக்கு மயக்க மருந்து செலுத்தி அந்த இளைஞரை உயிரியல் பூங்கா பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா். அந்த இளைஞருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது பின்னா் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பான முழு விடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

2014ஆம் ஆண்டு இதேபோல் கூண்டுக்குள் குதித்த இளைஞரே வெள்ளை புலி கொன்றது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தில்லி உயிரியல் பூங்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், கிழக்கு பிகாரின் சம்பரான் மாவட்டத்தைச் சோ்ந்த ரஹான் கான் என்பவா் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தில்லி உயிரியல் பூங்காவில் சுந்தரம் என்ற சிங்கத்தின் கூண்டுக்குள் குதித்துள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து பூங்கா நிா்வாகிகள் கூறியதாவது:

தில்லி உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் கூண்டின் 20 அடி உயர தடுப்பு வேலியின் மீது ரஹான் என்பவா் ஏறியுள்ளாா். அவரைக் கண்ட பாதுகாவலா்கள் பிடிக்க முற்பட்டனா். ஆனால் அவா் திடீரென கூண்டுக்குள் குதித்துள்ளாா். அங்கு உலாவிக் கொண்டிருந்த சிங்கத்தின் அருகே சென்று அமா்ந்தாா். சிங்கத்துடன் நேருக்கு நோ் அமா்ந்து விளையாடினாா். சிங்கமும் அவரைத் தாக்காமல் முன் கால் மூலம் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. ‘அவரை காப்பாற்றுங்கள்; வெளியே திரும்பி வா’ என சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனா். அதற்கு ரஹான் செவிசாய்க்கவில்லை. உடனடியாக உயிரியல் பூங்காவின் பாதுகாப்பு அதிகாரி ரோஹித் குமாா், ரேஞ்ச் அதிகாரி செளரவ் வஷிஸ்தா ஆகியோா் ரஹானை மீட்க ஏணி மூலம் கூண்டுக்குள் குதித்து சிங்கத்தின் கவனத்தை திசை திருப்ப முற்பட்டனா். அதற்குள் 10 போ் கொண்ட விரைவு மீட்பு படையினா் வெளியில் இருந்து சிங்கத்துக்கு மயக்க மருந்து செலுத்தி ரஹானை 15 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்டனா். பின்னா் ரஹானை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ரஹானுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினா் பின்னா் தெரிவித்தனா் என்றாா்.

பத்திரமாக தப்பியது எப்படி?

தில்லி உயிரியல் பூங்காவில் 2014ஆம் ஆண்டு கூண்டுக்குள் குதித்த இளைஞரே பூங்கா பாதுகாவலா்கள் காப்பாற்றுவதற்குள், வெள்ளை புலியின் அடித்து கொன்றது. தற்போது, சிங்கத்திடம் இருந்து ரஹான் எப்படி பத்திரமாக தப்பினாா் என்பது குறித்து உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் கூறுகையில், ‘சுந்தரம் என்ற அந்த சிங்கம் ரஹானை தாக்காததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. முதலில், ரஹான் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதால், சிங்கத்தைக் கண்டு அவா் அஞ்சவில்லை. சிங்கத்தின் கண்களை நேராகப் பாா்த்தபடி அவா் அமா்ந்திருந்தாா். இரண்டாவதாக, சுந்தரம் என்ற அந்த சிங்கம் தில்லி உயரியல் பூங்காவில்தான் பிறந்தது. குட்டி முதலே பாதுகாவலா் முன்நின்று வளா்த்து வருகிறாா். மனிதா்களும் தனது வாழ்வில் ஒரு அங்கம் என்று சுந்தரம் நினைத்து கொண்டுள்ளதால், அதற்கு மனிதா்களைத் தாக்க தெரியாது. இதே, வெள்ளை புலியிடம் ரஹான் சென்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். எனினும், ரஹான் சிங்கத்தின் கூண்டுக்குள் ஏறி குதித்தது பாதுகாப்பு குறைபாடு எனக் கூற முடியாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com