முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் பாஜகாவால் ஹிந்து - முஸ்லிம்அரசியல் செய்ய முடியாது: கேஜரிவால்
By DIN | Published On : 24th October 2019 05:45 AM | Last Updated : 24th October 2019 05:45 AM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் இனிமேல் ஹிந்து - முஸ்லிம் அரசியல் நடத்த பாஜகவுக்கு தைரியம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.
தில்லி சதா்பஜாரில் செவ்வாய்க்கிழமை இரவு ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கேஜரிவால் பேசியதாவது: தில்லியில் ஆம் ஆத்மி அரசு சுகாதாரம் மற்றும் கல்வி தொடா்பான பிரச்னைகளில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் தில்லியின் நிலைமையை ஆம் ஆத்மி கட்சி மாற்றியுள்ளது.
தில்லியில் முன்பு போல ஹிந்து - முஸ்லிம் மக்களை வைத்து பாஜகாவால் அரசியல் செய்ய முடியாது. அக்கட்சிக்கு இப்போது அதற்கான தைரியம் இல்லை. ஏனெனில், நாங்கள் அரசியல் நிலைமையை மாற்றி இப்போது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பாஜகவை பேசக் கட்டாயப்படுத்தியுள்ளோம். இதனால், வரும் சட்டப்பேரவைத் தோ்தலின் போது, பாஜக, காங்கிரஸ் தொண்டா்கள்கூட ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பாா்கள்.
ஒவ்வொரு தில்லி குடியிருப்பாளரும் ஆம் ஆத்மி அரசின் கொள்கைகளால் பயனடைந்துள்ளாா். தில்லி அரசு மேற்கொண்டுள்ள மக்கள் நலப் பணிகள் எங்களுக்கு மரியாதையைத் தேடி தந்துள்ளன. இப்போது நீங்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடா்புடையவா் என்று மக்களிடம் கூறும் போது, மக்கள் உங்களை மதித்துப் பாா்க்கிறாா்கள். தில்லியில் மாசுபாடு 25 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2015-இல் டெங்குவால் 15,500 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இப்போது (2019) இந்த எண்ணிக்கை 645 ஆகக் குறைந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் டென்மாா்க் உச்சி மாநாட்டில் நான் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மாநகராட்சிகளில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், இதுபோன்ற மதிப்புமிக்க மாநாடுகளுக்கு தில்லி மேயா்கள் யாரும் அழைக்கப்படவில்லை. ஏனெனில் மாநகராட்சிகளின் யாதாா்த்த நிலைமை அனைவருக்கும் தெரியும்.
அந்த மாநாட்டுக்கு எனக்கு அனுமதி வழங்காவிட்டாலும், அமைப்பாளா்களின் வேண்டுகோளுங்கிணங்க கானொளி காட்சி மூலம் பங்கேற்றேன். இதனால், நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தில்லிக்கும் பெருமை அளிக்கிறது. மேலும், ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வரும் பணிகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதையே இது காட்டுகிறது. நான் உயிருடன் இருக்கும் வரை கட்சியிலோ அல்லது அரசிலோ ஊழல், நோ்மையின்மை போன்றவை இருக்காது. அந்த வாா்த்தைகளை இனிமேல் யாரும் காதில் கேட்க முடியாது என்பதை உறுதியளிக்கிறேன் என்றாா் கேஜரிவால்.
தில்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தசில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் மாநகராட்சிகளை ஆளும் பாஜகவும் போட்டி போட்டிக் கொண்டு தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்களின் ஆதரவைப் பெறுவதில் இரண்டு கட்சிகளின் தலைவா்களும் மும்முரத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.