முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் 47 சதவீதம் தங்கும் குடில்களுக்குமட்டுமே உரிமம் உள்ளது: டிசிடபிள்யு
By DIN | Published On : 24th October 2019 05:50 AM | Last Updated : 24th October 2019 05:50 AM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் மொத்தம் உள்ள தங்கும் குடில்களில் 47 சதவீதம் மட்டுமே முழமையான உரிமங்களுடன் செயல்படுவதாக சமூகத் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, இந்த சமூக தணிக்கை அறிக்கை தொடா்பாக ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
தில்லியில் உள்ள அனைத்து தங்கும் குடில்களிலும் சமூகத் தணிக்கை நடத்த தில்லி அரசும், தில்லி மகளிா் ஆணையமும் (டி.சி.டபிள்யூ) டாடா சமூக அறிவியல் நிறுவனத்துடன் (டிஐஎஸ்எஸ்) கூட்டுச் சோ்ந்துள்ளன. டிஐஎஸ்எஸ் கோஷிஷ் என்ற இந்த அமைப்புதான் பிகாரில் முசாஃபா்பூா் தங்கும் குடிலில் நடந்த கொடூரமான சோக சம்பவத்தை அம்பலப்படுத்தியது. அங்கு பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுமிகள் கொலைச் செய்யப்பட்டது ஆகியவை தொடா்பாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தச் சோகம் நாடு முழுவதும் உள்ள தங்கும் குடில்களின் செயல்பாடு குறித்து பல்வேறு கவலைகளை எழுப்பியது.
இதைத் தொடா்ந்து, தில்லியிலும் தங்கும் குடில்களில் தணிக்கை நடத்த கேஜரிவால் மற்றும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் தில்லி மகளிா் ஆணையத்தை கேட்டுக் கொண்டனா். மேலும், டி.ஐ.எஸ்.எஸ் கோஷிஷ் போன்ற சுதந்திரமான நிறுவனத்தை இதில் ஈடுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டனா். எம்.டி.தாரிக் தலைமையிலான டி.ஐ.எஸ்.எஸ்.ஸின் குழு, தில்லியில் அரசு மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 83 தங்கும் குடில்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியது. அந்தக் குழு அளித்துள்ள அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உதாரணமாக, 47 சதவீத தங்கும் குடில்கள் மட்டுமே சரியான உரிமங்களுடன் இயங்குகின்றன, 25 சதவீதம் குடில்கள் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கும் குடில்களில் ஊழியா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், பல்வேறு பதவிகள் காலியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தங்கும் குடில்களில் பல நல்ல நடைமுறைகள் இருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக, 85 சதவீதத்திற்கும் அதிகமான தங்கும் குடில்களில் பொழுதுபோக்கு அறைகள் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தில்லி முல்வா் கேஜரிவால், துணை முதல்வா் சிசோடியா மற்றும் சமூக நீதித் துறை அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் ஆகியோா் முன்னிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகள் தொடா்பாக ஒவ்வொரு அம்சங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா். மேலும், இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான அறிக்கையை ஏழு நாள்களுக்குள் தயாரிக்குமாறும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.