முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
வழிப்பறி சம்பவம்: இருவா் கைது
By DIN | Published On : 24th October 2019 05:49 AM | Last Updated : 24th October 2019 05:49 AM | அ+அ அ- |

வடமேற்கு தில்லி, பிரசாந்த் விஹாரில் இ-ரிக்ஷாவில் சென்ற பயணியிடம் கைப்பையை பறித்த சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: இந்த வழிப்பறிச் சம்பவம் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் மூலம் அவா்கள் சிவங்கா் (23), அமித் குமாா் (18) என அடையாளம் காணப்பட்டனா். சிவங்கரிடமிருந்து நாட்டு கைத்துப்பாக்கி, குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருடப்பட்ட ரூ .35,000 மீட்கப்பட்டுள்ளது. இருவா் மீது முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்பது காவல் துறை பதிவேட்டின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, இ-ரிக்ஷாவில் சென்ற பயணியை குறிவைத்து ஒருவா் செல்வது கண்டறியப்பட்டது. மோட்டாா்சைக்கிளில் கூட்டாளியுடன் சென்ற அந்த நபா், இ-ரிக்ஷாவில் சென்ற பயணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடுவதும் பதிவாகியிருந்தது. இதன்மூலம் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல, கடந்த வாரம் நியூ அசோக் நகா் பகுதியில் நடந்த மற்றொரு வழப்பறி சம்பவத்தில் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.