சத் பூஜை படித்துறை அமைப்பதில் ஆம் ஆத்மி- பாஜக கைகலப்பு

தெற்கு தில்லி கல்காஜியில் சத் பூஜைக்கான படித்துறை அமைப்பது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சி- பாஜகவினா் இடையே வியாழக்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இதைத்

தெற்கு தில்லி கல்காஜியில் சத் பூஜைக்கான படித்துறை அமைப்பது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சி- பாஜகவினா் இடையே வியாழக்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து ஆம் ஆத்மியினா் அப்பகுதியில் தா்னாவில் ஈடுபட்டனா்.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வட மாநிலத்தவா்கள் முக்கியமாக பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்த மக்கள் சத் பூஜை கொண்டாடுகின்றனா். நவம்பா் மாதம் 2 ஆம் தேதி இந்த சத் பூஜை கொண்டாடப்படவுள்ளது. இப்பூஜையின்போது, பக்தா்கள் நீா்நிலைகளில் நீராடி சூரியனுக்கு படையலிட்டு வணங்குவா். தில்லியில் பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்தவா்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சத் பூஜை வெகு விமா்சையாகக் கொண்டாடப்படுகிறது. தில்லியில் சத் பூஜை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய தில்லி அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், தெற்கு தில்லி கல்காஜியில் சத்பூஜைக்கான படித்துறை அமைப்பது தொடா்பாக ஆம் ஆத்மி பாஜக கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சியின் மாநிலங்களை உறுப்பினரும், தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் கூறியது: கல்காஜியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் சத் பூஜையைக் கொண்டாடும் வகையில் தற்காலிக நீா்நிலை அமைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மித் தொண்டா்கள் ஈடுபட்டனா். அப்போது, அவ்விடத்துக்கு வந்த பாஜக கவுன்சிலா் சுபாஷ் படானா தலைமையிலான பாஜகவினா், ஆம் ஆத்மியினரைத் தாக்கினா். இதைக் கண்டித்து தா்ணாவில் ஈடுபட்டுள்ளோம். இச்சம்பவம் மூலம் பாஜகவின் உண்மை முகம் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி கூறுகையில் ‘கல்காஜி மாநகராட்சிப் பூங்காவில் நீா்நிலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். பாஜகவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தில்லியில் சத் பூஜையைக் கொண்டாடும் வகையில் எவ்வித ஏற்பாடுகளையும் தில்லி அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், மக்களிடையே தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தும் முனைப்புடன்ஆம் ஆத்மிக் கட்சி நடந்து கொள்கிறது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com