3 போலீஸ் என்கவுன்ட்டரில் நால்வர் கைது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நால்வர், வெவ்வேறு சம்பவங்களில் போலீஸாருடன் நடந்த

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நால்வர், வெவ்வேறு சம்பவங்களில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது கைது செய்யப்பட்டனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் போலீஸார் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஷீத். ஒன்பது குற்ற வழக்குகளில் அவருக்கு தொடர்புள்ளது. 
இது தொடர்பாக அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், மசூரி டவுன் அருகே பூத்காதி கால்வாய் பகுதியில் சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் வந்து கொண்டிருந்த அவரை போலீஸார் வழிமறித்தனர். ஆனால், போலீஸாரைக் கண்டதும் அவர் துப்பாக்கியால் சுட்டார். போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ரஷீத் காலில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது சம்பவம்: இதேபோன்று வசூந்தரா காலனி அருகே ஹிண்டன் கால்வாய் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த மூவரை போலீஸார் வழிமறித்தனர். அப்போது, அவர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். 
இதில் மூவரும் துப்பாக்கிக் குண்டுக் காயமடைந்தனர். அவர்கள் 24-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். காயமடைந்த மூவரில் இருவர் போலீஸாரிடம் சிக்கினர். மற்றொருவர் காயத்துடன் தப்பிச் சென்றார். கைது செய்யப்பட்ட இருவரும் பாதெளன் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஷ், ஜிதேந்திரா எனத் தெரிய வந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையின் போது அக்குமபல் சுட்டதில் உதவி ஆய்வாளர் ஆர்.பி. சிங் குண்டுக் காயமடைந்தார்.
மூன்றாவது சம்பவம்: இதேபோன்று வெள்ளிக்கிழமை இரவு மற்றொரு சம்பவத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தில்லி கோவிந்தபுரியைச் சேர்ந்த சோஹைல் கைது செய்யப்பட்டார். கான்சிராம் காலனி அருகே போலீஸார் ரோந்துப் பணியில் இருந்த போது, சோஹைலும் அவரது கூட்டாளியும் வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காவலர் அருண் குமார் காயமடைந்தார். 
போலீஸார் சுட்டதில் காயமடைந்த சொஹைல் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது கூட்டாளி தப்பிச் சென்றார். அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மூன்று சம்பவங்களில் காயமடைந்தபோலீஸார் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நால்வரையும் கண்டுபிடிக்க தகவல் தந்து உதவுவோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com