ஐஐடி-க்கு தேர்ச்சி பெற்ற தையல் தொழிலாளியின்  மகனின் படிப்பு செலவை ஏற்றது தில்லி குடும்பம்

தில்லி அரசின் இலவச பயிற்சி மையத்தில் பயின்று தில்லி ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற தையல் தொழிலாளியின்

தில்லி அரசின் இலவச பயிற்சி மையத்தில் பயின்று தில்லி ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற தையல் தொழிலாளியின் மகன் விஜய் குமாரின் (16) படிப்பு செலவை தில்லியைச் சேர்ந்த வருண் காந்தியின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
விஜய் குமாரின் தந்தை தையல் தொழிலாளியாகவும், தாய் வீட்டுப் பணிப் பெண்ணாகவும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், வருண் காந்தியின் குடும்பத்தினரும், விஜய் குமாரின் பெற்றோரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.  அப்போது விஜய் குமாரின் படிப்பு செலவை ஏற்ற வருண் காந்தியையும் அவரது குடும்பத்தினரையும் முதல்வர் கேஜரிவால் ஊடகத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறுகையில், "தில்லி அரசின் இலவச பயிற்சி மைய திட்டமான "ஜெய் பீம் முதல்வர் பிரதிபா விகாஸ் யோஜனா' மூலம் தில்லி ஐஐடி- நுழைவுத் தேர்வில் விஜய் குமார் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவரது கனவு நிறைவேறுவதற்கு தேவையான நிதி உதவி கிடைக்கவில்லை. விஜய் குமாரின் சாதனைகளை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்ட தில்லியைச் சேர்ந்த வருண் காந்தியும் அவரது குடும்பத்தினரும் அவரது தில்லி ஐஐடி-க்கான படிப்பு செலவை ஏற்பதற்கு முன்வந்துள்ளனர். சமூகத்துக்கு பங்களிப்பு அளிக்க வேண்டும் என்ற அவர்களின் இந்த முயற்சியைப் பார்த்து இதுபோன்ற சேவைகளைச் செய்ய மற்றவர்களும் முன்வர வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்வில் வருண் காந்தி தனது தாயாருடன் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் கூறுகையில், "கல்விக்கு எங்கள் குடும்பம் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கோயில்களுக்கு நன்கொடையாக நிதி அளிப்பதைவிட, இதுபோன்ற திறமைவாய்ந்த மாணவனின் ஐஐடி கனவை நிறைவேற்றுவதே கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதுகிறோம்' என்றார்.
நிகழாண்டில் தில்லி அரசின் இலவச பயிற்சி திட்டத்தில் பயின்ற ஏழை மாணவர்களில் 35 பேர் ஜேஇஇ மெயின், நீட் ஆகிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றனர்.  இதில், 5 மாணவர்கள் லேடிஹாரிங்டன் கல்லூரி, தில்லி ஐஐடி, நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தில்லி தொழில்நுட்ப தேசிய நிறுவனம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சேருவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com