திக்விஜய் சிங்-சிங்கார் மோதல்: காங். ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கிறது

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும், அந்த மாநில அமைச்சர் உமங் சிங்காரும்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும், அந்த மாநில அமைச்சர் உமங் சிங்காரும் பகிரங்கமாக கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க கட்சித் தலைவர் சோனியா காந்தி பரிந்துரைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் உமங் சிங்கார். கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் இவர், திக்விஜய் சிங்குக்கு எதிராக அண்மையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். கமல்நாத் அரசை திரைமறைவிலிருந்து திக்விஜய் சிங் இயக்குவதாகவும், தனது ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மூலம் அரசை மிரட்டி வருவதாகவும் சிங்கார் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். 
அதேசமயம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாக தாம் விமர்சித்த பிறகுதான், சிங்கார் தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக திக்விஜய் சிங் தெரிவித்தார். மேலும், சோனியா காந்தியை கடந்த வாரம் சந்தித்த திக்விஜய் சிங், சிங்கார் மீது புகார் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்கட்சி பூசல் தீவிரமடைந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக்  பார்பாரியா விசாரணை மேற்கொண்டு, சோனியா காந்தியிடம் வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்தார். இதையடுத்து, முதல்வர் கமல்நாத் சோனியாவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "திக்விஜய் சிங் - சிங்கார் இடையிலான மோதல் விவகாரம் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க சோனியா காந்தி பரிந்துரைத்துள்ளார். ஏ.கே. அந்தோணி தலைமையிலான அந்த குழு, தனது அறிக்கையை அடுத்த வாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com