வங்கி மோசடியாளர்கள் 147 பேரை தேடப்படும் நபர்களாக அறிவிக்க எஸ்பிஐ நடவடிக்கை: ஆர்டிஐ-யில் தகவல்

கடந்த 5 மாதங்களில், வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட 147 பேரை தேடப்படும் நபர்களாக

கடந்த 5 மாதங்களில், வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட 147 பேரை தேடப்படும் நபர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மேற்கொண்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது. 
மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விஹார் துர்வே, வங்கிக் கடன் மோசடியாளர்கள் தொடர்பாக பொதுத் துறை வங்கிகளிடம் சில தகவல்களை ஆர்டிஐ-யின் கீழ் கோரியிருந்தார். அதற்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த தகவலின் விவரம்: 
வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட நபர்கள், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்படுகின்றனர். 
அத்தகைய அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் படைத்தவர்களின் பட்டியலில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரிகள், நிர்வாக இயக்குநர்கள் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி சேர்த்தது. 
பின்னர் அவர்களுக்கான அதிகாரம் தொடர்பான விதிமுறைகளை இந்திய வங்கிகள் சங்கம் கடந்த மார்ச் மாதம் இறுதி செய்தது. வங்கிக் கடன் மோசடியாளர்களை தேடப்படும் நபர்களாக அறிவிக்கும் நடவடிக்கையை அடுத்து, தேவையான சட்டப் பாதுகாப்பு, காவல்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றை பெற இந்த விதிமுறைகள் வகை செய்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில், வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட 147 பேரை தேடப்படும் நபர்களாக அறிவிப்பதற்காக குடியேற்ற அமைப்பிடம் பாரத ஸ்டேட் வங்கி அனுமதி கோரியுள்ளது. 
நிதி மோசடியாளர்கள் 49 பேர் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் தெரிவித்தது. 
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, தொழிலதிபர்கள் நிதின், சேத்தன் சந்தேசரா உள்ளிட்ட அத்தகைய பல மோசடியாளர்கள் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகின்றன என்று அந்தத் தகவலில் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 
ஆர்டிஐ மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில், தேடப்படும் நபர்களாக எவரையும் அறிவிக்கவில்லை என்று யூகோ வங்கி, கனரா வங்கி ஆகியவை பதிலளித்துள்ளன. அதுதொடர்பான தகவல்கள் தங்கள் வசம் இல்லை என்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பரோடா வங்கி போன்றவை தங்களது பதிலில் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com