ஜேஎன்யு தேசத் துரோக வழக்கில் கேஜரிவால் அரசின் நிலைப்பாடு என்ன? மீனாட்சி லேகி எம்.பி. கேள்வி
By DIN | Published On : 10th September 2019 07:21 AM | Last Updated : 10th September 2019 07:21 AM | அ+அ அ- |

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) தேசத் துரோக வழக்கில் முதல்வர் கேஜரிவால் அரசின் நிலைப்பாடு என்ன? என்று புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசத் துரோக வழக்கில் கன்னையா குமார் மற்றும் பிறருக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். எனினும், இந்த விவகாரம் குறித்து அனைத்து விதமான தகல்களையும் தில்லி உள்துறை சேகரித்து பரிசீலித்த பிறகு உரிய முடிவை எடுக்கும் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், இந்த வழக்கில் தில்லி அரசு அனுமதி வழங்கிவிட்டதாக வெளியான ஊடகத் தகவல்களை நிராகரித்த முதல்வர், அது ஊகத்தின் அடிப்படையிலானது என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கேஜரிவால் அரசின் நிலைப்பாடு என்ன என மீனாட்சி லேகி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:
2016, பிப்ரவரியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பிய நபர்களுக்கு தில்லி அரசு ஆதரவாக இருக்கிறதா என்பதை முதல்வர் கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும். அப்சல் குருவை தூக்கிலிடுவதற்கும், இந்தியாவுக்கும் எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இது போன்ற மொழியில் பயங்கரவாதிகள்தான் பேச முடியும். ஆகவே, இந்தியாவைப் பிளவுபடுத்த விரும்பும் நபர்களுக்கு ஆதரவாக இருக்கிறாரா என்பதை கேஜரிவால் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது போன்ற நபர்களை வரும் தேர்தல்களில் நிறுத்த ஆம் ஆத்மி கட்சி பரிசீலித்தால் அது ஆச்சரியமான விஷயமாகும். தில்லி அரசு நீதித் துறையின் பணியிலும் தலையிட்டு வருகிறது. தேசத் துரோக வழக்குப் பதிவு செய்வதற்கு ஜேஎன்யு சம்பவம் மிகவும் பொருத்தமானதாகும். அதற்கான சட்டப் பிரிவுகளும் உள்ளன என்றார் மீனாட்சி லேகி.
பின்னணி: 2016, பிப்ரவரி 9-இல் ஜேஎன்யு வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக அப்போதைய ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தில்லி காவல் துறையினர் ஜனவரியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கன்னையா குமார், ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வழக்கை விசாரித்த தில்லி நீதிமன்றம் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு தில்லி அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்காக காவல் துறைக்கு இரு மாதம் அவகாசமும் வழங்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் மீது தில்லி அரசு முடிவு எடுக்காமல் இருப்பது குறித்து நீதிமன்றம் கடிந்து கொண்டது.