சுடச்சுட

  

  பெண்ணையாற்றுத் தடுப்பணையால் தமிழக பாசன, குடிநீர் ஆதாரம் பாதிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

  By DIN  |   Published on : 13th September 2019 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டுவதால், தமிழகத்தின் குடிநீர், பாசன வசதிகள் பாதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை வாதிடப்பட்டது. 
  பெண்ணையாற்றின் குறுக்கே அனுமதியின்றி கர்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வலியுறுத்தி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு 6 வாரங்களும், கர்நாடக அரசு தாக்கல் செய்யும் பதில் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்களும் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 7-இல் உத்தரவிட்டது. 
  தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு வந்த போதிலும், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
   இதில், தமிழகத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, ஜி. உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பான விஷயங்கள், இரு மாநிலங்கள் இடையேயான நீர் தாவா குறித்தும், பெண்ணையாறு விவகாரத்தில் 2012-இல் இருந்து மத்திய அரசுக்கு அப்போதைய தமிழக முதல்வர் எழுதிய கடிதங்கள் தொடர்பாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  மேலும், "கர்நாடக அரசு ஏற்கெனவே நதிநீர் தொடர்பாக போடப்பட்ட 1892, 1933 ஆகிய ஒப்பந்தங்களை மீறும் வகையில் பெண்ணையாறு பகுதியில் தடுப்பணையைக் கட்டி வருகிறது. குடிநீர்த் தேவை என்ற பெயரில் பெண்ணையாற்றின் நீரோட்டத்தைப் பாதிக்கும் அளவுக்கு கர்நாடகம் அணை கட்டி வருவது தமிழகத்தின் சில மாவட்டங்களில் குடிநீர், நீர்ப்பாசனத் தேவையைப் பாதிக்கும். 36 மீட்டர் உயரத்திற்கு அணை கட்டுவதைத் எப்படி தடுப்பணை என்று ஏற்றுக் கொள்ள முடியும்? இது மிகப் பெரிய அணை. 
  எனவே, அணையைக் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்' என்று தமிழக அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
  அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த அணை எந்தப் பகுதியில் கட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளீர்களா?' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழகம் தரப்பில், "இந்த அணை, பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கேண்டய நதிப் பகுதியில் தமிழகத்தின் எல்லையில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியும் உரிய நடவடிக்கை இல்லை. இதன் காரணமாகவே, நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது' என்றனர்.
   மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் காத்ரி, "இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்த அமைப்புக்குச் செல்வதற்கும் நதி நீர் உடன்படிக்கையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அது தொடர்பாக இரு மாநிலங்களும் யோசிக்கலாம்' என்றார்.
  இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த தமிழக தரப்பு வழக்குரைஞர்கள், "இது நீர்ப் பங்கீடு விவகாரமாக இருந்தால் தீர்ப்பாயத்திற்கு செல்லலாம். ஆனால், இது அணை கட்டும் விவகாரம் என்பதால்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மேலும், இந்த அணை கட்டும் திட்டத்தின் விவரங்களைக் கூட தமிழக அரசிடம் கர்நாடகம் தெரிவிக்கவில்லை.
  மேலும், அணை கட்டுவதற்கு முன்பு தமிழக அரசின் சம்மதத்தையும் பெறவில்லை. இது அணைக்கு கீழ் உள்ள மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது.
   நீர்ப் பங்கீடு விவகாரம் உள்ளதால் இதில் உச்சநீதிமன்றம் தலையிடும் அதிகாரம் இல்லை என்று கர்நாடகம் கூறுவதை ஏற்க முடியாது. இது நீர்ப் பங்கீடு விவகாரம் அல்ல. விதியை மீறி அணையைக் கட்டுவதைத்தான் தவறு என்கிறோம்' என்றனர். 
  கர்நாடகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷியாம் திவான், "கர்நாடகம் தனது எல்லைக்குள்பட்ட பகுதியின் சில பகுதிகளில் குடிநீர்த் தேவைக்காகவே தடுப்பணையைக் கட்டி வருகிறது. இதனால், தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் பாதிப்பு வரப் போவதில்லை. மேலும், இது நீர்ப்பாசனத் தேவைக்கானதும் அல்ல. 
  இதனால், 1933-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக கருதுவதற்கு  இடமில்லை. இது தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பாயம் மூலம்தான் தமிழக அரசு தீர்த்துக் கொள்ள முடியும். நீதிமன்றத்திடம் முறையீடு செய்ய சட்டத்தில் இடமில்லை' என்றார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai