Enable Javscript for better performance
டி.யு. மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி அபார வெற்றி: செயலர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது- Dinamani

சுடச்சுட

    

    டி.யு. மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி அபார வெற்றி: செயலர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது

    By DIN  |   Published on : 14th September 2019 03:07 AM  |   அ+அ அ-   |    |  

    தில்லி பல்கலைக்கழக (டி.யு.) மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஆதரவு அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) செயலர் பதவியைக் கைப்பற்றியது.
    வெற்றி பெற்ற ஏபிவிபி வேட்பாளர்கள் கிங்ஸ் வே கேம்பில் இருந்து பேரணியாக சென்றனர். அவர்களுக்கு டோல் வாத்தியங்கள் இசைத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்துக்கு வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும், வேட்பாளர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
    மொத்தமுள்ள 52 கல்லூரிகளில் வாக்குச்சாவடிகளில்  இரவு 7.30 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 1.3 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் பதிவு பெற்ற வாக்காளர்களாக இருந்தபோதிலும் வெறும் 39.90 சதவீத வாக்குகளே பதிவாகின. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் குறைவாகும். 
    தேர்தல் முடிவுகள்: பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெள்ளிக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஏபிவிபியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் அஷ்வித் தாஹியா தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளர் சேத்னா தியாகியை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
    இதேபோல், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபியின் வேட்பாளர் பிரதீப் தன்வார் 8,574 வாக்குகள் வித்தியாசத்திலும், இணைச் செயலர் பதவிக்கு போட்டியிட்ட ஷிவாங்கி கார்வால் 2,914 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
    கடந்த 2014ஆம் ஆண்டு ஏபிவிபி சார்பில் இணைச் செயலர் பதவிக்கு போட்டியிட்ட ஆஷிஷ் மாத்தூர் 11,800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு தற்போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
    என்எஸ்யுஐ சார்பில் செயலர் பதவிக்கு போட்டியிட்ட ஆஷிஷ் லாம்பா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் யோகி ரதியை விட 2,053 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.  மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 4 பெண் வேட்பாளர்களாவர். அதில், இரண்டு பெண் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

    மிஷன் சஹாசி தொடங்கப்படும்: ஏபிவிபி 

    தேர்தல் வெற்றி குறித்து ஏபிவிபியின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் மோனிகா சௌதரி கூறுகையில், "இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் தலைவர் பதவி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மூன்று பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மிஷன் சஹாசி திட்டத்தைத் தொடங்க உள்ளோம்' என்றார்.

    வன்முறைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்: என்எஸ்யுஐ
    என்எஸ்யுஐயின் நிர்வாகி ஆகாஷ் லக்ரா கூறுகையில், "2017ஆம் ஆண்டு ராம்ஜாஸ் கல்லூரியில் கலவரம் நடைபெறும்போது யோகி ரதிதான் அந்தக் கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தார்.  தற்போது இந்தத் தேர்தலில் அவர் தோர்க்கடிக்கப்பட்டுள்ளார். வன்முறைக்கு எதிராக மாணவர்கள் வாக்களித்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது' என்றார்.

    வாக்குசதவீதம் அதிகரித்துள்ளது: ஏஐஎஸ்ஏ
    இடதுசாரிகள் ஆதரவு பெற்ற அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) வேட்பாளர்கள் யாரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. எனினும், தங்கள் வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இணைச் செயலர் பதவிக்கு போட்டியிட்ட எங்கள் வேட்பாளர் சேத்னா 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது அதிகம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
     

    kattana sevai