ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. 
பிரிட்டன் தலைநகர் லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் சொத்து ஒன்றை வாங்கியதில் முறைகேடு செய்ததாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வதேரா விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். 
இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள அவர், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்று தில்லியிலுள்ள அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னர், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் கடந்த ஜூன் மாதம் சென்றார். இருப்பினும் அவர் பிரிட்டன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
இதனிடையே, தொழில் நிமித்தமாக, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை சென்று வருவதற்கு அனுமதி கோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வதேரா கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றபோது, ""வதேரா ஸ்பெயின் செல்வதற்கு அனுமதி அளித்தால், அவர் வழக்கில் தொடர்புடையவர்களைச் சந்தித்து சாட்சிகளைக் கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது'' என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதம், அடிப்படை ஆதாரமற்றது என்று வதேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி கூறினார்.
இந்நிலையில், இந்த மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதி அரவிந்த் குமார், வதேரா ஸ்பெயின் செல்ல அனுமதி வழங்கினார். அந்த உத்தரவில், "வதேரா வெளிநாடு செல்ல அனுமதி அளித்தால், அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாக உள்ளது. 
எனவே, செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை, அவரது ஸ்பெயின் பயணத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், விசாரணைக்காக அதிகாரிகள் அழைக்கும் பட்சத்தில், 72 மணிநேரத்துக்குள் அவர் ஆஜராக வேண்டும். ஸ்பெயின் சென்று திரும்பியதும் பாஸ்போர்ட் மற்றும் விசாவின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com