வாகனக் கட்டுப்பாடு திட்டம் காற்று மாசைக் குறைக்குமா?

தில்லியில் குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்த மீண்டும் தனியார்     வாகன கட்டுப்பாடு
தலைநகர் புதுதில்லியில் வாகன நெரிசல்
தலைநகர் புதுதில்லியில் வாகன நெரிசல்

தில்லியில் குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்த மீண்டும் தனியார்     வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த தில்லி அரசு மேற்கொண்டுள்ள முயற்சி பலன் அளிக்குமா? தில்லி வாசிகளிடம் இத்திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்குமா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 
சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் இந்தத் திட்டத்தை விளம்பர நோக்கிலேயே தில்லி அரசு கொண்டு வருவதாகவும், முந்தைய காலங்களில் இந்தத் திட்ட அமலாக்கத்தால் பெருமளவில் மாசு குறையவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
ஏற்கெனவே, புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஆயிரக் கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், தில்லி அரசு அறிவித்துள்ள வாகன கட்டுப்பாட்டை மீறினால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் இத்திட்டச் செயலாத்துக்கு தில்லிவாசிகளிடம் வரவேற்பு இருக்குமா என்பது கேள்விக்குரியாக உள்ளது.
மக்கள் எதிர்ப்பு: கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் அமல்படுத்தப்பட்ட தனியார் வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு தில்லிவாசிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தில்லி அரசின் இந்தத் திட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 
இதையடுத்து பெண்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் வகையில், அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்குர் மற்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் தங்களது கார்களை பகிர்ந்து கொண்டனர். இருவரும் ஒரே பகுதியில் அருகருகே வசித்து வந்ததால் இது சாத்தியமாகியது.
கட்டுப்படுத்த முடியாத அளவில் வாகனங்கள்: தில்லியில் மோட்டார் வாகனங்களின் பயன்பாடு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகி வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பொதுமக்களும் வங்கிகள் அளிக்கும் சுலப தவணைத் திட்டத்தின் மூலம் வாகனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். 
தில்லியில் பெருகிவிட்ட வாகனப் பெருக்கத்தை சமாளிக்க முடியாமல் ஆளும் அரசு திணறி வருகிறது . வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை தில்லி அரசு முன்பு அமல்படுத்திய போது, ஒற்றை இலக்க வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க வாகனங்கள் ஒரு நாளும் செயல்படுத்த விதிமுறைகள் கொண்டு வந்தது. ஆனால், அரசு எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், வாகனப் புகை அதிகரிப்பை கட்டுப்படுத்த 2000 சிசி வாகனங்கள் விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதுவும் பின்னர் விலக்கிக் கொள்ளப்
பட்டது. 
மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம்: இந்நிலையில், வாகன கட்டுப்பாட்டு திட்டத்தை தில்லி அரசு நவம்பர் 4 முதல் 12 நாள்களுக்கு அமல்படுத்தப்படும் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் நாடகம்: "கேர் பார் ஏர் என்ஜிஓ'வின் நிறுவனர் ஜோதி பாண்டே கூறுகையில், "தில்லி சட்டபேரவைக்கு தேர்தல் வரும்நிலையில், காற்று மாசு குறைப்புக்கு யார் காரணம் என்ற ஆதாயம் தேடுவதில் ஆம் ஆத்மி, பாஜக போட்டியிட்டு வருகின்றன. 
தில்லியில் கடந்த காலங்களில் காற்று மாசு குறைந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. மீண்டும் தனியார் கார் கட்டுப்பாடு திட்டத்தை கேஜரிவால் அறிவித்துள்ளது அரசியல் நாடகம். இதுபோன்ற சில நாள் திட்டங்களைத் தவிர்த்துவிட்டு நீண்ட நாள் தீர்வுத் திட்டத்தை தில்லி அரசு கொண்டு வர வேண்டும்' என்று தெரிவித்தார்.
வாகன மாசு மட்டுமின்றி, குப்பை எரிப்பு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசு போன்ற பிற காரணிகளை அதிகாரிகள் கண்டறிந்து ஆண்டு முழுவதும்  தீவிர நடவடிக்கை எடுத்து காற்றுமாசைக் குறைக்க நிரந்தரத் தீர்வு காண வேண்
டும். மேலும், தில்லியில் வாகனங்கள் தினந்தோறும் பெருகி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தாமல் வாகன இயக்கத்தை மட்டும் கட்டுப்படுத்தினால் மாசு குறையும் என்று நினைப்பது ஆட்சியாளர்களின் பகல் கனவாகவே அமையும் என்பது நிதர்சனம்.


"காற்று மாசு 2-3% குறைந்தது'
2016 ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்ட தனியார் கார் கட்டுப்பாட்டு திட்டத்தின்போது, 2 முதல் 3 சதவீத காற்று மாசு மட்டுமே குறைந்தது என தில்லி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட தில்லி ஐஐடி பேராசிரியர் தினேஷ் மோகன் கூறுகையில், "எங்கள் ஆய்வு ஆய்வுத் தகவல்களில் உறுதியாக இருக்கிறோம். முதல் முறையாக தில்லி அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தின்போது காற்று மாசு குறையவே இல்லை. 
இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதில் அர்த்தம் இல்லை. சர்வதேச அளவில் விளம்பரம் பெறுவதற்காக தில்லி அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருகிறது' என்றார்.

"வாகன மாசு 40% அதிகரிப்பு'
தில்லியில் 2010 முதல் 2018 வரை வாகனங்களால் ஏற்படும் மாசு 40 சதவீதமாக அதிகரித்துள்ளது என ஐஐடிஎம் பூணே, மத்திய அரசின் காற்று மாசு கண்காணிப்பு மையம் சஃபர் ஆகியவற்றின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் நிபுணர் அனுமிதா ராய் தெரிவித்தார். எனினும், மாசு கட்டுப்பாட்டில் வாகனங்களைத் தவிர்த்துவிட முடியாது. தில்லி அரசின் இந்த தனியார் வாகனக் கட்டுப்பாடு திட்டம் அவசர நடவடிக்கையாகவே உள்ளது. காற்று மாசைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டால் உரிய பலன் கிடைக்கும் என்றார்.


"விலக்கே அளிக்க கூடாது'
 மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் இயக்குநர் டி. சாஹா கூறுகையில், "தில்லி அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது கட்டுப்படுத்த வேண்டும். ஓலா, உபேர், வர்த்தக வாகனங்கள் ஆகியவற்றை அனுமதித்தால் இந்தத் திட்டத்தின் நோக்கம் தோல்வி அடைந்துவிடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com