இரு மாதங்களுக்கு முன்பு மாயாமான "லட்சுமி' யானை தில்லியில் மீட்பு: பாகன் கைது

தில்லியில் இரு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன "லட்சுமி' எனும் பெயருடைய 47 வயது பெண் யானையை

தில்லியில் இரு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன "லட்சுமி' எனும் பெயருடைய 47 வயது பெண் யானையை வனத் துறையினர் தில்லி யமுனா காடர் பகுதியில் புதன்கிழமை காலை மீட்டனர். இதையடுத்து, யானையின் பாகன் கைது செய்யப்பட்டார். இந்த யானையைக் கண்டுபிடிக்க தேசிய அளவில் தேடுதல் அறிவிப்பும் வெளியிடப் பட்டிருந்தது.
தில்லி சக்கர்பூர் பகுதியில் வசித்து வரும் யூசுஃப் அலியின் குடும்பத்திற்குச் சொந்தமான இந்த யானையை உரிய வகையில் பராமரிக்கவில்லை என்பதால் அதைப் பறிமுதல் செய்வதற்கு நோட்டீஸை வனத் துறையினர் பிப்ரவரி மாதம் வெளியிட்டிருந்தனர். இதை எதிர்த்து யூசுஃப் அலி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், யானையை புதிய இடத்திற்கு மாற்றம் செய்த பின்புதான் வனத் துறையினர் யானையை பறிமுதல் செய்ய முடியும் என அவர் மனுவில் கூறியிருந்தார். 
இதனிடையே, யானையை இடமாற்றம் செய்வதற்கு ஹரியாணாவில் உள்ள பான் சந்தூர் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு தில்லி வனத் துறையினர் அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தனர். யானையை இடமாற்றம் செய்வதற்காக உறுதிசெய்து அந்த மாநிலத் தலைமை வனவிலங்கு வார்டனிடமிருந்து ஜூலை 1-ஆம் தேதி தில்லி வனத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஜூலை 6-ஆம் தேதி, வனத் துறை குழு, யானை வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றது. அப்போது, அலியும், அவரது மகனும், உறவினரும் அவர்களைத் தாக்கினர். அப்போது, யானைப் பராமரிப்பாளர் யானையுடன் அங்கிருந்து அக்ஷர்தாம் அருகில் உள்ள வனப் பகுதியில் தலைமறைமாகிவிட்டார்.
இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தின் போது வனத் துறை அனைத்து மாநிலங்களின் தலைமை வனவிலங்கு வார்டன்களுக்கும் கடிதம் எழுதியிருந்தது. அதில், யானையின் இருப்பிடம் குறித்து தெரிய வந்தால் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டது. மேலும், நேபாளம் நாட்டுக்கு யானை கடத்தப்பட்டிருக்கலாம் என வனத் துறைக்கு சந்தேகம் எழுந்ததால், உஷார்படுத்துமாறு வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், அந்த யானை சக்கர்பூர் பகுதியில் உள்ள யமுனை காடர் பகுதியில் புதன்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தில்லி வனத் துறை அதிகாரி கூறியதாவது: தில்லி காவல் துறையினர் லட்சுமி யானையையும், அதன் பாகன் சதாமையும் தில்லியில் உள்ள யமுனா காடர் பகுதியில் புதன்கிழமை காலை மூன்று மணி அளவில் கண்டுபிடித்தனர். அந்த யானைக்கு போதிய நீரும், காலை உணவும் வழங்கப்பட்டது. யானையின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. 12 அதிகாரிகள் அடங்கிய மூன்று குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தன. உத்தர பிரதேசம் - தில்லி எல்லைப் பகுதியில் உள்ள யமுனை ஆற்றின் கரையோரம் யானை இருப்பதாகத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, அந்தப் பகுதியில் அதிகாரிகள் குழுவினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். யமுனைக் கரையோரப் பகுதியில் யானை அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகம் எழுந்ததால், யமுனைப் பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு காவல் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை காலை யானையையும் அதன் பாகனையும் சக்கர்பூர் காவல் நிலையத்தினர் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யானை தற்போது பாதுகாப்பாக உள்ளது. யானை குளிக்க வைக்கப்பட்டு அதற்கு காலை உணவும் வழங்கப்பட்டது. அந்த யானை ஹரியாணாவில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த யானை தற்போது கிழக்கு தில்லி காவல் ஆணையர் அலுவலகப் பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
திருமணம், சமய விழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு இந்த யானை  பயன்படுத்தப்பட்டு வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
இந்நிலையில், தில்லி காவல் துணை ஆணையர் (கிழக்கு) ஜஸ்மீத் சிங் கூறுகையில், "சம்பந்தப்பட்ட யானை, யமுனை காடர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பாகன் சதாம் கைது செய்யப்பட்டுள்ளார். யானையின் உரிமையாளர் யூசுஃப் அலி, அவரது மூத்த மகன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
சம்பந்தப்பட்ட லட்சுமி யானை சக்கர்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரட்டது. எனினும், வனத் துறையினர் யானையைப் பறிமுதல் செய்ய முயன்றதால், காவல் நிலையத்திற்கு வெளியே அமளி ஏற்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை காலை 11 மணிக்கு யானை அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com