உரிமம் இன்றி கார் ஓட்டிய காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தில்லி காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் (பி.யு.சி.) ஆகியவை

தில்லி காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் (பி.யு.சி.) ஆகியவை இன்றி காரை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: செவ்வாய்க்கிழமை அன்று ஓர் ஆணும், பெண்ணும் மோரி கேட் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்த மண்டல காவல் அதிகாரியை அணுகினர். அப்போது, தில்லி பதிவு எண் மற்றும் கருப்பு நிற ஜன்னல்களைக் கொண்ட கார் ஒன்று போக்குவரத்து சிக்னலின் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரியிடம் அவர்கள் தெரிவித்தனர். அந்தக் கார் தில்லி காவலர் விஷால் தபாஸுக்கு சொந்தமானது என்றும் அவர்கள் கூறினர். 
இதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்தக் காரில் இருந்த காவலரிடம் ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
மேலும், குறைபாடுள்ள நம்பர் பிளேட்டைக் கொண்டிருந்த அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனம் தனது சகோதரருக்கு சொந்தமானது என்றும், ஆனால், அதைத் தான் பயன்படுத்தி வருவதாகவும் காவலர் தபாஸ் கூறினார். இதைத் தொடர்ந்து, தவறான நடத்தை தொடர்பாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com