தில்லி தேசிய உயிரியல் பூங்காவை இனி ஆணையம் நிர்வகிக்கும்

இதுவரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தில்லி தேசிய

இதுவரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தில்லி தேசிய உயிரியல் பூங்காவை, இனிமேல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-இன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வ அமைப்பான மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் நிர்வகிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய உயிரியல் பூங்காவில் நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய ஓர் உயர்நிலைக் குழுவை அமைச்சகம் அமைத்தது. அக்குழு, விலங்குகளை "சட்டவிரோதமாக' கொள்முதல் செய்தல் மற்றும் விலங்குகளின் இறப்புகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றில் முறைகேடு இருப்பதைக்  கண்டறிந்தது. 
இதைத் தொடர்ந்து, தேசிய உயிரியல் பூங்காவின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு மாற்ற பரிந்துரை செய்தது.
இது தொடர்பாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் உறுப்பினர் செயலாளருக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணை இயக்குநர் (வனவிலங்கு) ஆர். கோபிநாத், ஜூன் 18 -ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், குழுவின் பரிந்துரைகளின் படியும், தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் ஒப்புதலுடனும் தேசிய உயிரியல் பூங்காவின் நிர்வாகக் கட்டுப்பாடு மாற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அதில் தேசிய உயிரியல் பூங்காவின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு மாற்றும் அமைச்சகத்தின் முடிவை கூட்டம் ஏற்றுக் கொண்டது. 
மேலும், தேசிய உயிரியல் பூங்காவில் தகுந்த நிர்வாகம், மேலாண்மை இருக்கும் வகையில் அதிகாரமிக்க ஒரு குழுவை நியமிக்கும் படியும் அதன் இயக்குநர் ரேணு சிங்கை அக்கூட்டம் கேட்டுக் கொண்டிருந்தது.
தற்போதைய நிலையில், தேசிய உயிரியல் பூங்காவின் இயக்குநர் ஒட்டுமொத்த நிர்வாகத் தலைவராக இருந்து வருகிறார். இவர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் வனவிலங்குகளின் கூடுதல் இயக்குநருக்கு நிர்வாகம் தொடர்பான அறிக்கைகளை அளித்து வருகிறார்.
நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும், 1992-இல் உருவாக்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம்
தேசிய உயிரியல் பூங்காவின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றும் நடவடிக்கையை எதிர்த்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டி.என். சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் ஓர் ஒழுங்காற்றுச் செயல்பாடு வகுக்கப்பட்டுள்ளது என்றும், எனவே, அதன்படி தேசிய உயிரியல் பூங்காவின் நிர்வாகக் கட்டுப்பாட்டை இந்த ஆணையம் ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் ஓர் ஒழுங்குமுறை அமைப்பு நேரடியாக ஈடுபடக் கூடாது என்பதால், இந்த நடவடிக்கை மோதலுக்கே வழிவகுக்கும் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


வங்கப் புலி "ரமா' சாவு
தில்லி உயிரியல் பூங்காவில் 8 வயதான வங்கப் புலி "ரமா'  சிறுநீரகங்கள் பாதிப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.  இதுகுறித்து தில்லி உயிரியல் பூங்காவின் அதிகாரி கூறியதாவது: 
கடந்த 2014ஆம் ஆண்டு மைசூரில் இருந்து வங்கப் புலி ரமா தில்லி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல் ரமாவுக்கு உடல் நிலை சரியில்லை. போதிய உணவை ரமா புலி எடுத்துக் கொள்ளாததால் உடல் நலிவடைந்தது. இதனால் வெள்ளிகிழமை மாலை 3 மணியளவில் ரமா புலி உயிரிழந்தது. புலியின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அதன் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. 
இதனிடையே, ரமா புலி உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் உறுப்பினர் செயலர் எஸ்.பி. யாதவ் அமைத்துள்ளார்' என்றனர். முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி கூண்டுக்குள் குடிநீர் வைக்க சென்ற தில்லி உயிரியல் பூங்காவின் பணியாளர் ஃபதே சிங்கை ரமா புலி தாக்கியது. இதில், ஃபதே சிங்கின் விரலில் காயமேற்பட்டது. இதையடுத்து, மதுரா, பரேலியில் இருந்து வரவழைக்கப்பட்ட வன விலங்கு மருத்துவர்கள் ரமா புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். புலிகளின் சராசரி வாழும் காலம் 20 ஆண்டுகளாகும் என வன விலங்கு ஆர்வர் ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com