லோக் ஆயுக்த சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீது  பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்த சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்த சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு "லோக் ஆயுக்த சட்டம் 2018' நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள "லோக் ஆயுக்த சட்டம் 2018' அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைக்கும், லோக்பால் சட்டம் பிரிவு 63-க்கு எதிரானதாகவும் உள்ளது. இந்த அமைப்புக்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யும் குழுவில் முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்தான் இடம் பெறுவர். எனவே, இதில் பெரும்பான்மையானவர்கள் ஆதரிக்கும் நபர்களே அந்த அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்படுவர். இந்த நடைமுறையானது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.
குறிப்பாக, லஞ்ச ஒழிப்பு தொடர்பாக குற்றம் நடந்த 4 ஆண்டுகளுக்குள்ளாகவே புகார் கொடுத்தால் மட்டுமே லோக் ஆயுக்த அமைப்பால் விசாரிக்க முடியும். இதனால், தவறிழைத்தவர்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டு. மேலும், ஊழல் குற்றம் இழைத்த நபர் மீது வழக்குத் தொடுக்கவோ, அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யவோ, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவோ லோக் ஆயுக்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. புகார் தொடர்பான அறிக்கையை மாநில அரசுக்குத்தான் அந்த அமைப்பு அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மேல் நடவடிக்கை எடுக்கவும் லோக் ஆயுக்தவுக்கு அதிகாரம் இல்லை.
மேலும், லஞ்சம், ஊழலில் ஈடுபடுபவர்களை காப்பாற்றும் நோக்கில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே, இச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி புதிதாக லோக் ஆயுக்த சம்பந்தமாக உரிய சட்டத்தை இயற்ற வேண்டும். அதுவரையிலும், ஊழல், லஞ்சத்தை ஒழிக்க தேவையான விதிமுறைகளை நீதிமன்றம் உருவாக்க வேண்டும்' என மனுவில் கோரப்பட்டுள்ளது. 
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சிராஜுதீன், " இந்த மனு மீது உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார். அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் லோக் ஆயுக்த அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com