Enable Javscript for better performance
இடதுசாரி கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி நன்கொடை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    இடதுசாரி கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி நன்கொடை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு

    By DIN  |   Published on : 25th September 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடதுசாரி கட்சிகளுக்கு திமுக ரூ. 25 கோடி நன்கொடை வழங்கியதாக வெளிவந்துள்ள செய்திகள் புனையப்பட்ட கட்டுக்கதை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில், மக்களவைத் தேர்தலின்போது திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட மனு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.25 கோடியை திமுக நன்கொடையாக வழங்கியதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எனினும், இந்தத் தொகையை இடதுசாரிக் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவு தொடர்பான மனுவில் குறிப்பிடவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. இந்நிலையில், இந்தச் செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதி மற்றும் செலவுகள் தொடர்பாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை தவறான தகவல்களாகும். எங்கள் கட்சியை இழிவுபடுத்தும் நோக்கில் அவை உருவாக்கப்பட்டுள்ளன.
    அச்செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்கு மாறாக, மக்களவைத் தேர்தலின்போது எங்கள் கட்சி பெற்ற அனைத்து நன்கொடைகளும், நிதியும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் கணக்கு-வழக்குகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் கட்சி பெற்ற நன்கொடைகள் அவற்றில் அடங்கும். மக்களவைத் தேர்தலின்போது கட்சி மேற்கொண்ட முழுச் செலவும் அதில் இடம்பெற்றுள்ளன. ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள கட்சியின் செலவானது புனையப்பட்ட கட்டுக்கதையாகும்.
    அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலின்போது மேற்கொண்ட செலவு தொடர்பாக கணக்குகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடும்போது நாங்கள் கூறியுள்ளதை சரிபார்த்துக் கொள்ளலாம். மார்க்சிஸ்ட் கட்சி தனது தேர்தல் செலவுகளை மறைத்து விட்டது என்பது தவறான குற்றச்சாட்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai