துவாரகா-நஜஃப்கர் வழித்தடத்தில் உயரதிகாரி இன்று ஆய்வு

தில்லி மெட்ரோ ரயில்வே ஒருங்கிணைப்பில் 4.2 கிலோ மீட்டர் நீளமுள்ள துவாரகா - நஜஃப்கர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்வே

தில்லி மெட்ரோ ரயில்வே ஒருங்கிணைப்பில் 4.2 கிலோ மீட்டர் நீளமுள்ள துவாரகா - நஜஃப்கர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் புதன்கிழமை (செப். 25) ஆய்வு நடத்த உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் 4.295 கிலோ மீட்டர் தூரத்திற்கு துவாரகா -நஜஃப்கர் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. 
ரயில் தண்டவாளத்தின் திறன்கள், சமிக்ஞை விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்குவதற்கு முன்பாக, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு அவசியம். 
எனவே, இதற்கான ஆய்வு துவாரகா- நஜஃப்கர் வழித்தடத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளதாகவும், இந்த ஆய்வை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் மேற்கொள்ள உள்ளதாகவும் டிஎம்ஆர்சி மூத்த அதிகாரி தெரிவித்தார்.
துவாரகா- நஜஃப்கர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் துவாரகா, நாங்லி, நஜஃப்கர் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. 
இவற்றில் துவாரகா, நாங்லி ரயில் நிலையங்கள் மேல்வழித்தட ரயில் நிலையங்களாகும். நஜஃப்கர் ரயில் நிலையம் தரைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடமானது 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இப்பணி 2020 டிசம்பருக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். 
இதுகுறித்து டிஎம்ஆர்சி அதிகாரி கூறுகையில், "இந்த ரயில் சோதனை ஓட்டத்தின்போது ரயில் தண்டவாளத்தின் கட்டுமான அமைப்புகள் சோதனையிடப்பட்டன. 
மேலும், தண்டவாளத்தில் ரயில் செல்லும் போது, ஏதேனும் தடங்கல் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது' என்றார்.
தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் மொத்தம் 343 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தில்லி மற்றும் அண்டை நகரங்களில் 250 மெட்ரோ ரயில் நிலையங்களையும் தில்லி மெட்ரோ கொண்டிருக்கிறது. 
தில்லி மெட்ரோ ரயிலில் தினமும் சுமார் 28 லட்சம் பேர் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com