வீட்டு வாடகைதாரர்களுக்கு மின் மானிய திட்டம்: முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் வீடுகளில் வாடகைதாரர்களாக குடியிருப்போருக்கு மின்சார மானியம் அளிக்கும் புதிய திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தார்.

தில்லியில் வீடுகளில் வாடகைதாரர்களாக குடியிருப்போருக்கு மின்சார மானியம் அளிக்கும் புதிய திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தார்.
"முக்கிய மந்திரி கிராயதார் பிஜ்லி மீட்டர் யோஜனா' எனும் பெயரிலான இத்திட்டத்தின்படி தில்லி அரசின் மின்சார மானியத்தை வீட்டு வாடகைதாரர்களும் பெற முடியும். தற்போது வரை, தில்லி அரசின் மின்சார மானியத் திட்டத்தில் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வசதி வீட்டு வாடகைதாரர்கள் பெற இயலாத நிலை உள்ளது. 
இந்தப் புதிய திட்டம் குறித்து தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
தில்லியில் உள்ள வீட்டு வாடகைதாரர்கள் தங்களுக்கும் தில்லி அரசின் மின்சார மானியத் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரி வந்தனர். இந்தப் புதிய திட்டத்தின் கீழ் வாடகைதாரர்கள் வாடகை ஒப்பந்தம் அல்லது வாடகை ரசீதையும், குடியிருப்பதற்கான முகவரிச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் தில்லியில் வாடகைக்கு குடியிருப்போரும் இலவச மின்சாரத்தைப் பெற முடியும். 24 மணி நேரமும் மலிவான மின்சாரத்தைப் பெறும் உரிமை தில்லியைச் சேர்ந்த ஒவ்வொருக்கும் உண்டு.
தற்போது வரை குடியிருப்போர் தனியாக மின்சார மீட்டரை பெற முடியவில்லை. தனிப்பட்ட இணைப்புப் பெறுவதற்கு வீட்டு உரிமையாளரின் தடையின்மைச் சான்றிதழைப் பெற வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம். இந்தக் கட்டாயத் தேவையை தற்போது நீக்கியுள்ளோம். 
ஆகவே, குடியிருப்போர் தற்போது வாடகைதாரர் மீட்டரை பெறலாம். அதற்கு வாடகை ஒப்பந்தம் அல்லது ரசீது அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையை சான்றாக அளித்தால் போதுமானது.
வீட்டு உரிமையாளர்கள் பலர், பலதரப்பட்ட வாடகைதாரர்களைக் கொண்டுள்ளனர். ஒரே மின் இணைப்பின் கீழ் பல வாடகைதாரர்கள் மின்சாரத்தை பயன்படுத்துவதால் அதிகமான கட்டணத்தை வாடகைதாரர்கள் செலுத்தும் நிலை உள்ளது. 
தங்களது வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ரூ.10 வரை செலுத்தும் நிலை உள்ளது. இதனால், தில்லி அரசின் 200 யூனிட்டுகள் இலவச மின்சார மானியத்தை அவர்களால் பெற முடியாத நிலை உள்ளது. 
மேலும், வீட்டு உரிமையாளர்களும் இந்தத் திட்டத்தின் பலன்களை அனுபவிக்க முடியாமல் போகிறது. 
இதனால், வாடகைதாரர்களுக்கான திட்டத்தில் அவர்கள் குடியிருக்கும் வீடுகளில் பிரீபெய்டு மீட்டர்கள் பொருத்தப்படும். இதன் மூலம் 200 மீட்டர்கள் வரை அவர்கள் இலவச மின்சாரத்தின் பலனைப் பெற முடியும். மேலும், 200 முதல் 400 மீட்டர் வரையிலான மின்சாரப் பயன்பாட்டில் மானியத்தையும் பெற முடியும். 
ஒரு மீட்டர் பொருத்துவதற்கு ரூ.6 ஆயிரம் செலவாகும். இதில் ரூ.3 ஆயிரம் வைப்புத் தொகையாகும். ரூ.3 ஆயிரம் மீட்டர் பொருத்தும் பணிக்கான சேவைக் கட்டணங்களாகும் என்றார் அவர். 

தில்லியில் என்ஆர்சி அமலானால் மனோஜ் திவாரி வெளியேறுவார்
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தில்லியில் அமல்படுத்தப்பட்டால் நகரை விட்டு முதல் நபராக தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரிதான் வெளியேற வேண்டியிருக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ஆர்சி வெளியிடப்பட்டது. இதேபோன்று, தேசியத் தலைநகர் தில்லியிலும் என்ஆர்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று சமீபகாலமாக தில்லி பாஜக தலைவரும்,  மக்களவை உறுப்பினருமான மனோஜ் திவாரி வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில்,  தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் கேஜரிவாலிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து முதல்வர் கேஜரிவால் கூறுகையில்,  "தில்லியில் என்ஆர்சி அமல்படுத்தப்பட்டால்,  மனோஜ் திவாரிதான் முதல் ஆளாக தில்லியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றார்.
கடந்த மாதம் மனோஜ் திவாரி என்ஆர்சி தொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். வங்கதேசத்தவர்கள், ரோஹிங்கியாக்கள் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக அதிகமான அளவில் தில்லியில் இருப்பதால் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ள சூழல்  ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

மனோஜ் திவாரி பதிலடி
தில்லியில் உள்ள பூர்வாஞ்சல் மக்களை வெளியேற்ற முதல்வர் கேஜரிவால் விரும்புவதாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி குற்றம்சாட்டியுள்ளார்.  என்ஆர்சி தொடர்பாக கேஜரிவால் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் போஜ்புரி பாடகரும்,  வடகிழக்கு தில்லி எம்.பி.யுமான மனோஜ் திவாரி புதன்கிழமை கூறியதாவது: 
என்னைப் பற்றிய கருத்தின் மூலம் கேஜரிவாலின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. மேலும், பூர்வாஞ்சலிகள் போன்றவர்களை தில்லியில் இருந்து வெளியேற்ற முதல்வர் கேஜரிவால் விரும்புகிறார்.  தில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்கள் பிகார், கிழக்கு உத்தரப் பிரேதசம் போன்ற நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். தில்லியில் எந்தத் தேர்தலிலும் முக்கியமான பங்களிப்பு அளிப்பவர்கள். மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, இதர மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தில்லியில் வசித்து வருகின்றனர். அவர்களை வெளியேற்ற கேஜரிவால் விரும்புவதையே அவரது பேச்சு காட்டுவதாக உள்ளது.  என்ஆர்சி குறித்து இந்திய வருவாய்ப் பணி அதிகாரியாக இருந்த கேஜரிவாலுக்கு தெரியாதா? இதன் மூலம் அவரது  மனம் சமநிலையை இழந்துவிட்டதுபோல் தெரிகிறது.  கேஜரிவாலை நான்அவரது கொள்கைகளுக்காக விமர்சித்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் அவரை தரக்குறைவாகப் பேசியது இல்லை என்றார் திவாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com