துவாரகா - நஜஃப்கர் புதிய வழித்தடம் விரைவில் தொடக்கம்!

தில்லி மெட்ரோவின் 4.2 கிலோ மீட்டர் நீளமுள்ள துவாரகா-நஜஃப்கர் மெட்ரோ வழித்தடம் (கிரே லைன்) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
துவாரகா மெட்ரோ ரயில் நிலையம்
துவாரகா மெட்ரோ ரயில் நிலையம்

தில்லி மெட்ரோவின் 4.2 கிலோ மீட்டர் நீளமுள்ள துவாரகா-நஜஃப்கர் மெட்ரோ வழித்தடம் (கிரே லைன்) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 

துவாரகாவிலிருந்து நகர்ப்புற கிராமமான நஜஃப்கருக்கு விரைவுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் முடிந்து ரயில் சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. 

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 25) மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் இத்தடத்தில் ஆய்வு மேற் கொண்டார். இந்த வழித் தடத்தில் ரயிலை இயக்குவதற்கான ஒப்புதலையும் அவர் அளித்துள்ளார். 

துவாரகா, நாங்லி, நஜஃப்கர் ஆகிய ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் துவாரகா ரயில் நிலையம் (புளு லைன்) இடைமாறிச் செல்லும் நிலையமாக இருக்கும். இந்த வழித்தடம் தொடங்கப்பட்டதும், தில்லி மெட்ரோவின் மொத்த வலையமைப்பு 377 கி.மீ. ஆகவும், ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 274 ஆகவும் அதிகரிக்கும். 

துவாரகா - நஜஃப்கர் வழித்தடத்தில் 2.57 கி.மீ. மேல்வழித் தடமாகவும், 1.5 கி.மீ. தரைக்கு அடியில் செல்லும் வழித்தடமாகவும் உள்ளது. 

இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததும், துவாரகா ரயில் நிலையம், பயணிகள் இடைமாறிச் செல்லும் வசதியைப் பெறுகிறது. இதன் மூலம் நகர்ப்புற கிராமப் பகுதியான நஜஃப்கர் பகுதிக்கும் மெட்ரோ ரயில் மூலம் செல்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது. 

இந்தப் புதிய வழித்தடம் அனேகமாக அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேதி இதுவரை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேதி விரைவில் அறிவிக்கப்படும். 

இந்த வழித்தடத்தில் பயணிகள் அதிகம் செல்லும் நேரங்களில் 7 நிமிடங்கள் 30 வினாடிகளுக்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படும். மேலும், துவாரகா - நஜஃப்கர் பயண நேரம் 6 நிமிடங்கள் 20 வினாடிகளாக இருக்கும். இந்த வழித்தடத்தில் முதல்கட்டமாக மூன்று மெட்ரரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. நான்காவது ரயிலையும் இயக்கத் டிஎம்ஆர்சி திட்டமிட்டு வருகிறது. 

தற்போது டிஎம்ஆர்சி மொத்தம் 376 ரயில்களை இயக்கி வருகிறது. மொத்த ரயில் பெட்டிகள் 2,206 ஆகும். ஒரு நாளைக்கு பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 4,778 தடவைகள் (டிரிப்) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

இப்புதிய வழித்தடத்தில் அமைந்துள்ள துவாரகா ரயில் நிலையத்தில் இருந்து 80 மீட்டர் தொலைவில் துவாரகா செக்டார்-21 ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதற்கு எளிதாகச் செல்லும் வகையில், பிரத்யேகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. துவாரகா செக்டார் 21 ரயில் நிலையத்திலிருந்து நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி, வைஷாலி ஆகிய இடங்களுக்குச் செல்லும் வசதி உள்ளது. 

துவராகா ரயில் நிலையம் தற்போது இடைமாறிச் செல்லும் வசதியைப் பெறுவதன் மூலம், தில்லி மெட்ரோவில்  இடைமாறிச் செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 28-ஆக உயரும். 

துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் வாகன நிறுத்தமிடம் ஏற்படுத்தப்படும். பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து செல்வதற்கு பேட்டரி ரிக்ஷா, பேருந்து வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புதிதாக அமைக்கப்பட்டுள்ள நஜஃப்கர் ரயில் நிலையத்தின் மொத்த நீளம் 288 மீட்டராகும். இதுதான் தில்லி மெட்ரோவில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் அதிக நீளம் கொண்டதாகும். இந்த ரயில் நிலையம் மிகுந்த சவாலுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

துவாரகா மெட்ரோ ரயில் நிலைய கூரைப் பகுதியில் 175 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல நஜஃப்கர் ரயில் நிலையத்தில் 182 கிலோவாட், நாங்லியில் 240 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தம் 597 கிலோவாட் அளவு சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யும் வழித்தடமாக நஜஃப்கர் - துவாரகா வழித்தடம் இருக்கும். 

தில்லி மெட்ரோ தற்போது மொத்தம் 30 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்து வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com