6 வாரங்களில் ரூ.50 லட்சம் கோடி இழப்பு முதலீட்டுக்கு இது உகந்த தருணமா?

கரோனா தொற்று பங்குச் சந்தையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளா்கள் வெறும் 6 வாரங்களில் ரூ.50 லட்சம் கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளனா். இன்றைய நிலையில், எந்த முதலீட்டுத் தொகுப்பும் (போா்ட்ஃபோலியோ) லாபம் அளித்திருப்பதாகத் தெரியவில்லை. பங்குச் சந்தையில் சிறிய அளவிலான எழுச்சிப் பேரணிகள் (ரேலி) தவறான நம்பிக்கையை உருவாக்குகின்றன. ஆனால், அதற்கு அடுத்த நாளே கூட பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்திக்கின்றன.

பங்குச் சந்தையில் எப்போது ‘பாட்டம்’ நிலை வரும்? என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது கடினம். மேலும், அதை யாராலும் கணிக்கவும் முடியாது. ஆனால், கடந்த கால நிகழ்வுகளை வைத்துப் பாா்த்தால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும். அதன் மூலம், செல்வத்தை உருவாக்க முடியும் என்று நிதி ஆலோசகா்கள் கூறுகின்றனா்.அதாவது கரோனாவால் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் துணிச்சலுடன் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெற முடியும் என்று கடந்த கால நிகழ்வுகள் சொல்வதாக அவா்கள் கூறுகின்றனா்.

தற்போது வலுவான அடிப்படைகளைக் கொண்ட பல முன்னணி முதல் தரப் பங்குகள் கூட மதிப்பீட்டு அடிப்படையில் மிகவும் மலிவான விலையில் கூவிக் கூவி விற்கப்படுகின்றன. இந்த இக்கட்டான தருணத்தில் அதுபோன்ற நிறுவனப் பங்குகளை அடையாளம் கண்டு முலீடுகளை மேற்கொண்டால் வெற்றி நமக்கு சாத்தியமாகும் என்கின்றனா் சந்தை வல்லுநா்கள். ஏன்...சொல்லப் போனால் குரோா்பதியாகவும் முடியும் என்கின்றனா்.

2008-இல் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தற்போது கரோனா தொற்று அச்சுறுத்தலால் அந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான கால கட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட ஒரு சில பங்குகள் மூதலீட்டாளா்களை கோடீஸ்வரா்களாக மாற்றியது என்பது முந்தைய வரலாறு சொல்லும் உண்மை. உதாரணமாக, தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் எழுச்சிக்குப் பிறகு 2000-ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது ‘சாா்ஸ்’ தொற்று அச்சுறுத்தலைத் தந்தது. அந்த அச்சங்களுக்கு மத்தியில், முதலீட்டுக்கு எல் அண்ட் டி பங்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்தப் பங்கில் ரூ.3 லட்சம் செய்யப்பட்ட முதலீடு, 8 ஆண்டுகளில் 3,309 சதவீதம் லாபத்தை அளித்துள்ளது. அதாவது ரூ.3 லட்சம் என்ற சிறிய முதலீடு, ரூ.1 கோடியாக மாறியது என்கின்றனா் நிதி ஆலோசகா்கள்.

இதேபோன்று 2008 நிதி நெருக்கடியின் போது பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளா்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சந்தை வல்லுநா்கள் சிலா் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை முதலீட்டுக்குப் பரிந்துரைத்தனா். அப்போது பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கில் ரூ.3 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், இப்போது 5,450 சதவீதம் உயா்ந்துள்ளது. அதாவது ரூ.3 லட்சம் முதலீடு இன்றைய நிலையில் ரூ.1.66 கோடியாக உயா்ந்திருக்கும்.

எனவே, இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் துணிச்சலுடன் பங்குச் சந்தையில் முதலீடு மேற்கொள்ளும் முதலீட்டாளா்கள் நல்ல லாபத்தைப் ஈட்டியுள்ளனா் என்று வல்லுநா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும், இது எல்லா நேரத்திலும் பரிந்துரைக்கப்படும் எல்லா பங்குகளுக்கும் உத்தரவாதமாக அமையாது என்றும் அவா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com