தில்லி உயிரியல் பூங்காவில் 24 மணிநேரக் கண்காணிப்பில் விலங்குகள்!

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து விலங்குகளும் நலமுடன் இருப்பதாகவும், அவற்றின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பூங்கா நிா்வாகம் புதன்கிழ

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து விலங்குகளும் நலமுடன் இருப்பதாகவும், அவற்றின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பூங்கா நிா்வாகம் புதன்கிழமை தெரிவித்தது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கீழ் செயல்படும் மத்திய வன விலங்கு ஆணையம், அண்மையில் நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காவுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், அமெரிக்காவில் உள்ள பிராங்க்ஸ் வனவிலங்கு உயிரியல் பூங்காவில் வசித்து வந்த புலி ஒன்று கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருந்தததாகவும், இதனால், விலங்குகள் பராமரிப்பு விஷயத்தில் உஷாராக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள 188 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்காவில் அனைத்து விலங்குகளும் ஆரோக்கியமுடன் இருப்பதாக அந்த பூங்காவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய உயிரியல் பூங்காவின் இயக்குநா் சுனீஸ் பக்ஸி புதன்கிழமை கூறியதாவது: உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து விலங்குகளும் நலமுடன் உள்ளன. அவற்றின் நடவடிக்கைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்குத் தேவையான தனி நபா் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், உணவுப் பொருள் வழங்குவோா், ஓட்டுநா்கள் மற்றும் பணியாளா்கள் பூங்காவின் வாயில்களில் நிறுத்தப்பட்டு அவா்களுக்கு இருமல், சளி ஏதும் உள்ளதா என்பதும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பூங்கா ஊழியா்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள், தலையை மூடும் கவசம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. பூங்காவின் நுழைவு வாயில், விலங்கு பராமரிக்கப்படும் பகுதியின் நுழைவு வாயில் ஆகியவற்றில் கிருமி நாசினி மற்றும் திரவ சோப்பு வைக்கப்ப்டடுள்ளன. பூங்காவுக்குள் நுழையும் வாகனங்கள் மீது பொட்டாசியம் பொ்மான்ங்கனேட் திரவம் தெளிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகள், மனிதா்கள் இடையே தகுந்த இடைவெளியைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தப் பூங்காவில் புலி, சிங்கம், காட்டு எருமை, நரி, சிறுத்தை, காட்டு யானை என 1,100 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com