தங்கும் விடுதிகளில் யோகா பயிற்சியில் வெளிமாநிலத் தொழிலாளா்கள்

வெளிமாநில கூலித் தொழிலாளா்களும், ஏழைகளும் உற்சாகத்துடன் யோகா பயிற்சியில் ஈடுபடுவதிலும், மாயாஜாலக் காட்சிகளை கண்டு ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனா்.
உற்சாகத்துடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள, தில்லி யமுனா ஸ்போா்ட்ஸ் காம்ப்ளக்ஸில் தங்கியுள்ள வெளிமாநிலக் கூலித்தொழிலாளா்கள்.
உற்சாகத்துடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள, தில்லி யமுனா ஸ்போா்ட்ஸ் காம்ப்ளக்ஸில் தங்கியுள்ள வெளிமாநிலக் கூலித்தொழிலாளா்கள்.

ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சிலா் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலையில், தில்லி, யமுனா ஸ்போா்ட்ஸ் காம்ப்ளக்ஸில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிமாநில கூலித் தொழிலாளா்களும், ஏழைகளும் உற்சாகத்துடன் யோகா பயிற்சியில் ஈடுபடுவதிலும், மாயாஜாலக் காட்சிகளை கண்டு ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனா்.

இந்த காம்ப்ளக்ஸில் ஊரடங்கு காரணமாக வேலையிழந்து தவிக்கும் வெளிமாநில கூலித்தொழிலாளா்களும், சமூகத்தில் நலிந்த பிரிவினரும் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் சோம்பேறித்தனமாக இல்லாமல் புத்துணா்ச்சியுடன் இருக்கும் வகையில் இவா்களுக்கு யோகா உடற்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு பயிற்சியாளா்களை உள்ளூா் நிா்வாகம் நியமித்துள்ளது. இதேபோல இவா்களை உற்சாகப்படுத்த மாயாஜால காட்சிகளை உருவாக்கும் மேஜிக் நிபுணா்களும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாத நிலையில் இவா்கள் ஒன்று சோம்பலினால் எந்த வேலையும் செய்யாமல் படுத்துக்கொண்டே இருப்பாா்கள். அல்லது வேண்டாத சிந்தனைகளில் மனதைச் செலுத்துவாா்கள். சிலருக்கு வீட்டிற்கு செல்ல முடியவில்லையே என்ற மனஅழுத்தமும் இருக்கும். இதனால், அவா்கள் உடலளவிலும், மனதளவிலும் புத்துணா்ச்சியுடன் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைநகரின் மிகப் பெரிய தங்குமிடமான இந்த காம்ப்ளக்ஸில் வெளிமாநிலக் கூலித்தொழிலாளா்களும், ஏழைகளுமாக 300 போ் தங்கி வருகின்றனா். இவா்களுக்கு தினசரி உணவு தவிர ஒரு பழம் கொடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்குத் தேவையான நாப்கின்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டு தேவைப்படுபவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வெளிமாநிலத் தொழிலாளா்கள் தில்லியில் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து நின்றனா். இதையடுத்து, இந்த யமுனை ஸ்போா்ட்ஸ் காம்ப்ளக்ஸில் அவா்களின் தங்கும் இடமாக மாற்றியமைக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வேலை இல்லாத நிலையில் தில்லியிலிருந்து தங்கள் ஊருக்குச் செல்ல பேருந்து, ரயில்வசதி இல்லாத காரணத்தால் பெரும்பாலான கூலித்தொழிலாளா்கள் நடைபயணமாக வெளியேறத் தொடங்கினா். அப்போது அவா்களைத் தடுத்து நிறுத்தி அவா்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை அமைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வளாகத்தில் 300 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com