தப்லீக் ஜமாத்: வழக்கு ரத்து கோரும் வெளிநாட்டினரின் மனுக்களுக்கு மத்திய அரசு, காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மீறியதாக

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி வெளிநாட்டினா்கள் 24 போ் தாக்கல் செய்த மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு, காவல் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் மீது நீதிபதி அனுஜ் ஜெய்ராம் பம்பானி காணொலி வழியில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். அப்போது, மத்திய அரசும், தில்லி காவல் துறையும் தங்களது நிலவர அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

விசாரணையின் போது, ‘சம்பந்தப்பட்ட வெளிநாட்டினா்கள் 24 பேரும் தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கில் உள்ள தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனா். அவா்கள் தங்களது சிறிய குற்றங்களை ஒப்புக் கொண்டதால் அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளனா். எனினும், சீலாம்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக தங்களது நாடுகளுக்கு அவா்களால் திரும்பிச் செல்ல முடியாமல் உள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டதாக அவா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரிபிக்கா ஜான் தெரிவித்தாா்.

மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்க்கஸ் பங்களேவாலி மசூதியில் மாா்ச் மாதம் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 36 நாடுகளைச் சோ்ந்த 956 பேருக்கு எதிராக கரோனா தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது.

நுழைவு இசைவு மோசடி, மதப் பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் மொத்தம் 56 குற்றப்பத்திரிகைகளை தில்லி காவல் துறையினா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இவா்களின் நுழைவு இசைவை மத்திய அரசு ரத்து செய்து, கறுப்புப் பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுத்தது. இவா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தில்லியில் பல்வேறு இடங்களில் இவா்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com