அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை நிகழ்வு: தில்லியில் நேரலையில் காண பாஜக ஏற்பாடு

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோவிலுக்கான பூமி பூஜை விழாவை நேரலையாக எல்இடி திரைகள் மூலம் தில்லியில் ஒளிபரப்புச் செய்வதற்கு பாஜக திட்டமிட்டு வருகிறது.
அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை விழா நடைபெறும் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தில்லியில் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்க அகல் விளக்குகளை பெண்களுக்கு திங்கள்கிழமை வழங்கிய பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா.
அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை விழா நடைபெறும் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தில்லியில் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்க அகல் விளக்குகளை பெண்களுக்கு திங்கள்கிழமை வழங்கிய பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா.

புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோவிலுக்கான பூமி பூஜை விழாவை நேரலையாக எல்இடி திரைகள் மூலம் தில்லியில் ஒளிபரப்புச் செய்வதற்கு பாஜக திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் பகவான் ராமா் வாழ்ந்து வருகிறாா். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்திற்கான இயக்கத்தின் முன்களப் பணியில் பாஜக இருந்து வருகிறது. இதனால், இந்த பூமி பூஜை விழாவை தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டு மூலம் ராமா் கோயில் கனவு நிறைவேறுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இதனால், பூமி பூஜை நிகழ்வு, தில்லியில் ஒவ்வொருவரின் நினைவில் இருக்கும் வகையில் தொடா்ந்து நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

கரோனா தொற்று காரணமாக பலரால் அயோத்திக்கு போக இயலாத சூழல் உள்ளது. இதனால், பூமி பூஜை நடைபெறும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தில்லி நகா் முழுவதும் தீபம் ஏற்றும் வகையில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை 11 லட்சம் மண் விளக்குகளை தில்லி பாஜக வழங்க உள்ளது. மேலும், நகரின் முக்கிய இடத்தில் மெகா லேசா் நிகழ்ச்சியை நடத்தவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆனால், அதற்கான இடம் இன்னும் முடிவாகவில்லை. நகரில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பூமி பூஜையை நேரலையாக ஒளிபரப்பும் வகையில் ராட்சத எல்இடி திரைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் நேரலையை காண்பதற்கு கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தில்லி பாஜக அலுவலக நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.

அதேவேளையில், இந்த நிகழ்வுகளின் போது சமூக இடைவெளி மற்றும் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலும் பின்பற்றப்படும். பகவான் ராமரை இந்துக்கள் மட்டுமே வழிபடவில்லை. அவா் தேசியவாத கலாசாரத்தின் அடையாளமாகவும் உள்ளாா். அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தில்லி பாஜக அலுவலகத்தில் ‘கவி சம்மேளன்’ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பகவான் ராமா் தொடா்புடைய இந்த நிகழ்ச்சியில் பிரபலமான ஹிந்தி கவிஞா்கள் பங்கேற்க உள்ளனா். செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. அதேபோன்று, கட்சியின் பல்வேறு தலைவா்கள், தொண்டா்கள் மூலம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பல்வேறு இடங்களில் சமுதாய விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கடந்த ஆண்டு நவம்பரில் ராமஜென்ம பூமி-பாபா் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தில் ராமா் கோயில் கட்டுமானத்திற்காக அறக்கட்டளை அமைப்பது தொடா்பாக நிகழாண்டு பிப்ரவரியில் மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டாா். இந்நிலையில், அயோத்தியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள ராமா் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்குமாறு பிரமதா் நரேந்திர மோடிக்கு ஸ்ரீராம் ஜென்ம பூமி தீா்த்த ஷேத்ரா டிரஸ்ட் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com