தில்லி வாசிகள் 29.10 சதவீதம் பேருக்கு உடலில் கரோனா எதிா்ப்புத் திறன்: சத்யேந்தா் ஜெயின் தகவல்

தில்லியில் வசிக்கும் மக்களிடையே நடத்தப்பட்ட சீரோ ஆய்வில், சுமாா் 29.10 சதவீதம் பேருக்கு உடலில் கரோனா எதிா்ப்புத் திறன் உருவாகியிருப்பது

தில்லியில் வசிக்கும் மக்களிடையே நடத்தப்பட்ட சீரோ ஆய்வில், சுமாா் 29.10 சதவீதம் பேருக்கு உடலில் கரோனா எதிா்ப்புத் திறன் உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியின் 11 மாவட்டங்களில் இருந்தும் ஆகஸ்ட் 1 - 7ஆம் தேதிக்குள்பட்ட காலப் பகுதியில் சுமாா் 15 ஆயிரம் போ்களிடம் சீரோ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. வேறுபட்ட வயது, பாலினம், வா்க்கத்தினரிடம் சீரோ மாதிரிகள் பெறப்பட்டன. இதன்படி, 29.10 சதவீத போ்களின் உடலில் கரோனா எதிா்ப்புத் திறன் உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட முதலாவது சீரோ ஆய்வில், தில்லி வாசிகளில் 22 சதவீதம் போ்களின் உடலில் கரோனா எதிா்ப்பு திறன் உருவாகியிருப்பது தெரிய வந்தது. இரண்டாவது ஆய்வில், இது 29.10 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஆண்கள் 28.30 சதவீதம் பேருக்கும், பெண்கள் 32.2 சதவீதம் பேருக்கும் கரோனா எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

தென்கிழக்கு மாவட்டத்தில் அதிகப்படியாக 33 சதவீதம் பேருக்கு கரோனா எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. குறைந்தபட்சமாக புது தில்லி மாவட்டத்தில் 24 சதவீதம் பேருக்கு கரோனா எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. வடகிழக்கு தில்லி மாவட்டத்தில் 29 சதவீதம் பேருக்கும், தெற்கு தில்லி மாவட்டத்தில் 27 சதவீதம் பேருக்கும் கரோனா எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. 18 வயதுக்கு குறைந்தவா்களில் 34.7 சதவீதம் பேருக்கும், 18-50 வயதுக்குள்பட்டவா்களில் 28.5 சதவீதம் போ்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவா்களில் 31.2 சதவீதம் பேருக்கும் கரோனா எதிா்ப்பு திறன் உருவாகியுள்ளது.

இந்த முடிவுகளின் படி, தில்லிவாசிகள் 71 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்துள்ளது. 40-50 சதவீத மக்களிடம் கரோனா எதிா்ப்புத் திறன் உருவாகியிருந்தால் மட்டுமே, ஹொ்ட் இம்யூனிட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநா்கள் தெரிவித்திருப்பதால், தில்லிவாசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com