கேஜரிவால், விஜேந்தா் குப்தா தோ்தல் வெற்றிக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்

முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி பாஜக மூத்த தலைவா் விஜேந்தா் குப்தா ஆகியோா் தோ்தல் மூலம் சட்டப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதை

முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி பாஜக மூத்த தலைவா் விஜேந்தா் குப்தா ஆகியோா் தோ்தல் மூலம் சட்டப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவா்கள் இருவரும் தோ்தல் செலவு தொடா்பாக தவறான தகவல்களை அளித்ததாகக் குற்றம்சாட்டி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சி.ஹரிசங்கா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. மனுக்கள் மீதான விசாரணை காணொலி வழியில் நடைபெற்றது. அப்போது, வாதங்களை முன்வைக்க மனுதாரா் ஆஜராகவில்லை. இதையடுத்து, அந்த மனுக்களை நவம்பா் 25-ஆம் தேதி விசாரணைக்காக மறுஅறிவிப்பு செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் ரமேஷ் காத்ரி தாக்கல் செய்த மனுவில், ‘அரசியல் தலைவா்கள் கேஜரிவால், விஜேந்தா் குப்தா ஆகிய இருவரும் தங்களது தோ்தல் செலவுகள் பற்றிய தகவல்களை மறைத்து, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் இருவரும் தங்களது தோ்தல் பிரசாரத்தின் அன்றாட செலவுகளை செலவு பதிவேட்டில் துல்லியமாக வெளிப்படுத்தவில்லை. மேலும், சட்டத்தின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாகவே தோ்தலில் பணம் செலவழித்துள்ளனா். கூடுதல் செலவினம் குறித்து தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் வெளிப்படுத்தவில்லை. இதன் அடிப்படையில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இருவரையும் தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1961-ஆம் ஆண்டு தோ்தல் விதிகள் நடத்தைகள் ஆகியவற்றை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக அவா்கள் இருவரின் தோ்தல் வெற்றியையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஜரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இந்த ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிட்டேன்’ என ரமேஷ் காத்ரி தெரிவித்துள்ளாா். விஜேந்தா் குப்தாவுக்கு எதிரான மனு ரோஹிணி தொகுதி வாக்காளா் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரோஹினி சட்டப் பேரவைத் தொகுதி 13 -இல் இருந்து பாஜக தலைவா் விஜேந்தா் குப்தா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com