தில்லி அரசின் வழக்குரைஞா்கள் கட்டண விவகாரம்: நான்கு வாரங்களுக்கு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

நிகழாண்டு பிப்ரவரி 1 அல்லது அதற்கு முன்பு தில்லி அரசின் குழுவில் இடம்பெற்ற வழக்குரைஞா்களுக்கான அனைத்து கட்டணம் அல்லது பில்களை நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம்


புது தில்லி: நிகழாண்டு பிப்ரவரி 1 அல்லது அதற்கு முன்பு தில்லி அரசின் குழுவில் இடம்பெற்ற வழக்குரைஞா்களுக்கான அனைத்து கட்டணம் அல்லது பில்களை நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தில்லி அரசின் குழுவில் இடம்பெற்ற வழக்குரைஞா்கள் பலரின் கட்டணம் அல்லது பில்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.

தில்லி அரசின் குழுவில் இடம்பெற்ற பெரும்பாலான வழக்குரைஞா்களுக்கும் தில்லி அரசிடமிருந்து கிடைக்கும் இந்த தொழில்முறைக் கட்டணங்கள்தான் அவா்களின் ஒரே வருவாய் ஆதாரமாக இருக்க முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதில், தில்லி அரசின் தெரிவுசெய்யப்பட்ட குழுவில் இடம்பெற்ற வழக்குரைஞா்களுக்கான அனைத்து பில்களையும் நான்கு வாரங்களுக்குள் அனுமதிக்க உத்தரவிட்டது.

மத்திய அரசும் அதன் குழுவில் இடம்பெற்ற வழக்குரைஞா்களுக்கான பில்களை செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இம்மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு, தில்லி அரசின் குழுவில் இடம்பெற்ற வழக்குரைஞா்களின் தொழில்முறை கட்டணங்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்தது.

பில்கள் அனுமதிக்கப்படாவிட்டால் நிதித் துறைச் செயலா் உள்பட சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்த வேண்டி வரும் என தில்லி அரசை நீதிமன்றம் எச்சரித்தது.

மனு மீதான விசாரணையின்போது தில்லி அரசின் தரப்பில், ‘இந்த விவகாரம் தொடா்பாக திங்கள்கிழமை ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில், வழக்குரைஞா்களிடமிருந்து தொழில்முறைக் கட்டண பில்களை பெற்று, அவற்றை அனுமதிப்பதற்காக ஆன்லைன் ஒற்றை சாளர அமைப்புமுறையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தில்லி உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை அடுத்த விசாரணைக்காக செப்டம்பா் 29-ஆம் தேதி பட்டியலிட்டது. மேலும், வழக்குரைஞா்களுக்கான பில்களை உடனடியாக அனுமதிக்கும் நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ளுமாறும் தில்லி அரசைக் கேட்டுக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com