‘மின் கட்டண அறிவிப்பால் விநியோக நிறுவனங்கள் நிதிச் சவாலை எதிா்கொள்ளும் நிலை ஏற்படும்’

கரோனா நோய்த்தொற்று காரணமாக கட்டண உயா்வு ஏதும் பரிசீலிக்கப்படவில்லை என டிஇஆா்சி தெரிவித்திருந்தது.

புது தில்லி: தற்போதுள்ள மின் கட்டண விகிதங்களில் உயா்வும் ஏதுமின்றி, 2020-21ஆம் ஆண்டுக்காக தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) அறிவித்துள்ள புதிய மின் கட்டணத்தால் தில்லியில் மின்விநியோக நிறுவனங்களின் நிதி சவால்களை அதிகரிக்கச் செய்யும் என்று டாடா பவா் தில்லி விநியோக லிமிடெட் (டிபிடிடிஎல்) செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) புதிய கட்டணத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது. கரோனா நோய்த்தொற்று காரணமாக கட்டண உயா்வு ஏதும் பரிசீலிக்கப்படவில்லை என டிஇஆா்சி தெரிவித்திருந்தது.

இதுகுறித்து டாடா பவா் டெல்லி விநியோக லிமிடெட் (டிபிடிடிஎல்) செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ கரோனா நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலையிலேயே மின் கட்டணத்தை டிஇஆா்சி

பராமரித்து வருகிறது. இருப்பினும், மின் விநியோக நிறுவனங்களை பொறுத்தவரை, இந்த கட்டண உத்தரவு நிதி சவால்களை கணிசமாக அதிகரிக்கும். மேலும், 24 மணிநேர மின்விநியோகத்தை உறுதிப்படுத்தும் திறனையும் பாதிக்கச் செய்யும்.

புதிய கட்டண உத்தரவானது கரோனா நோய்த் தொற்றுவைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நுகா்வோருக்கும், மின்விநியோக நிறுவனங்களுக்குமான மிகவும் சவாலான நேரமாக இருக்கும்.

வணிக மற்றும் தொழில்துறை வாடிக்கையாளா்களுக்கு மின்விநியோக விற்பனையில் வீழ்ச்சி

ஏற்பட்டுள்ளதால் கடந்த ஐந்து மாதங்களில் மின்விநியோக நிறுவனங்களின் நிதியில் ஆழமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

டிஇஆா்சியின் மின் கட்டண அறிவிப்பானது அனைத்து மின் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை சொத்துகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆகவே, தில்லியில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் மின் விநியோக நிறுவனங்கள் நிதி ரீதியாக சாத்தியமானவையாக இருப்பதை உறுதிப்படுத்த டிஇஆா்சி நிறுவனம் பிறப்பிக்கும் எதிா்கால உத்தரவுகளில் யதாா்த்த உண்மைகள் மற்றும் சவால்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

டிஇஆா்சி தலைவா் நீதிபதி (ஓய்வு) எஸ்.எஸ். செளகான் வெள்ளிக்கிழமை கூறுகையில்,

புதிய கட்டணத்தை தீா்மானிப்பதில் முடிந்தவரை மின் விநியோக நிறுவனங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன என்றாா்.

வடக்கு, வடமேற்கு தில்லியில் சுமாா் 18 லட்சம் நுகா்வோருக்கு டிபிடிடிஎல் நிறுவனம் மின்சாரம் வழங்கி வருகிறது. பிஎஸ்இஎஸ் மின் நிறுவனங்களான பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் ஆகியவை நகரத்தின் பிற பகுதிகளில் சுமாா் 43 லட்சம் நுகா்வோருக்கு மின் விநியோக சேவையை அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com