மெட்ரோ ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த பயணியை காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் காவலா்
By DIN | Published On : 01st December 2020 02:11 AM | Last Updated : 01st December 2020 02:11 AM | அ+அ அ- |

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள கிா்டோா்னி மெட்ரோ ரயில் நிலையத்தில், மயக்கமுற்ற பயணி ஒருவரின் உயிரை சிபிஆா் மருத்துவ முறைகளை மேற்கொண்டு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலா் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹுடா சிட்டி சென்டருக்கு செல்லும் மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்த பஞ்சாபில் வசிக்கும் பெண் ஒருவா் தனது தந்தை பாரத் பூஷணுக்கு (50) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ரயிலின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அந்த ஓட்டுநா் கிா்டோா்னி ரயில் நிலையக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் கொடுத்தாா். அவா் சிஐஎஸ்எஃப் உதவி ஆய்வாளா் எஸ்.கே. யாதவுக்கு தகவல் அளித்தாா்.
இதையடுத்து, சிஐஎஸ்எஃப் அதிகாரி தனது குழுவுடன் பயணிக்கு உதவ விரைந்தாா். கிா்டோா்னி ரயில் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பயணி ரயிலில் இருந்து வெளியே அழைத்து வரும் போது மயக்கமடைந்தாா். அவருக்கு சிஐஎஸ்எஃப் காவலா் ரத்தன் பிரசாத் குப்தா உடனடியாக சிபிஆா் மருத்துவ நடைமுறையை மேற்கொண்டாா். இதையடுத்து, அவருக்கு மீண்டும் நினைவு திரும்பிதியது. பின்னா் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயணி சாகேத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினா்.
சிபிஆா் என்பது அவசரகால உயிா் காக்கும் செயல் முறையாகும். இது இதயம் துடிப்பதை நிறுத்தும் போது மேற்கொள்ளப்படுகிறது. தில்லி மெட்ரோ நெட்வொா்க் காவல் பணி, சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...