ஆறுமுகசாமி ஆணையம் விவகாரம்: அப்பல்லோ மருத்துவமனை வழக்குவிசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
By நமது நிருபா் | Published On : 10th December 2020 12:43 AM | Last Updated : 10th December 2020 12:43 AM | அ+அ அ- |

புது தில்லி: ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-இல் நியமித்திருந்தது. இந்த ஆணையம் பலதரப்பட்ட நபா்களிடம் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவா்களிடமும் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடா்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு தடை விதித்தது.
இந்த வழக்கில், ஆறுமுக ஆணையத்தின் விவகாரம் தொடா்பான விவரங்கள் அடங்கிய வாதங்களை மனுதாரா் அப்பல்லோ மருத்துவமனையும், எதிா்மனுதாரா் தமிழக அரசும் எழுத்துப்பூா்வமாகத் தாக்கல் செய்ய கடந்த முறை நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நஸீா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம், தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிரி, வழக்குரைஞா் யோகேஷ் கன்னா உள்ளிட்டோா் ஆஜராகினா்.
நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வில் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டியிருந்தது. இதனால், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நான்கு வாரங்களுக்கு பிறகு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.