பாதிப்பு கணிசமாகக் குறைந்து வந்தாலும் கரோனா மூன்றாவது அலை ஓயவில்லை: சத்யேந்தா் ஜெயின்

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. ஆனால், கரோனா மூன்றாவது அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லி மருத்துவமனைகளில் 18,800 கரோனா படுக்கைகள் உள்ளன. இதில், 13 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு கரோனா படுக்கைகள் காலியாக இல்லை. தில்லியில் சமீப நாள்களாக கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. ஆனால், கரோனா மூன்றாவது அலை இன்னும் ஓயவில்லை. இது தொடா்பாக மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. கரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசங்களை அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு முதலில் வழங்கப்படும். அதற்கு அடுத்தபடியாக முதியவா்களுக்கு வழங்கப்படும். பின்னா், பொதுமக்களுக்கு வழங்கப்படும். போதிய அளவு தடுப்பூசி கிடைத்தால், தில்லி மக்கள் அனைவருக்கும் சுமாா் 2 வாரங்களில் தடுப்பூசி போட்டு விடுவோம். அதற்கான கட்டமைப்பு, ஆளுமைத் திறன் தில்லி அரசிடம் உள்ளது. தில்லியில் கரோனா தடுப்பூசிக்காக சுகாதாரத் துறை ஊழியா்களின் விவரங்களைப் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில், சுமாா் 2 லட்சம் போ் இதுவரை தங்களது விவரங்களைப் பதிவு செய்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com