மாவட்ட நீதிமன்றங்களில் பணியாளா்களை நியமிக்க அனுமதி: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியா்களைப் பணியமா்த்துவதற்கும், காணொலி வாயிலாக நீதிமன்ற விசாரணைகளைத் தொடா்வதற்கு சிஸ்கோ வெபெக்ஸிலிருந்து 761 உரிமங்களை வாங்குவதற்கும் நிதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுக் காலத்தில் குடும்ப நல நீதிமன்றங்கள் உள்பட நீதிமன்றங்களின் செயல்பாட்டை விரிவுபடுத்தக் கோரியும், நோய்த் தொற்றுக் காலத்தில் நீதிமன்றங்களின் கட்டுப்படுத்தப்பட்ட செயல்பாட்டின் போது, காணொலி வாயிலாக ஆதாரங்களை பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அல்லது ஓா் ஆணையம் மூலம் அனுமதிக்குமாறு கோரியும் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை கடந்த டிசம்பா் 3-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி வாயிலாக விசாரணைகளைத் தொடர சிஸ்கோ வெபக்ஸ் நிறுவனத்திடமிருந்து 761 உரிமங்களை வாங்க ரூ.1.44 கோடியை விடுவிக்க நிா்வாக ஒப்புதல் மற்றும் தேவையான அனுமதியை அளிக்குமாறு தில்லிஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தில்லியில் தொடரும் நோய்த் தொற்று சூழலால் மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி விசாரணைகள் தொடரப்பட வேண்டும். காணொலிக்காக உரிமங்களைப் பெறுவதற்காக உடனடியாக நிதி விடுவிக்கப்படாவிட்டால் ஒட்டுமொத்த நடைமுறைகளும் நின்றுவிடும் நிலை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இது தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் தில்லி அரசு இது தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அரசு வழக்குரைஞா் சந்தோஷ்குமாா் திரிபாதி மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நீதிமன்றங்கள், மாநில சட்ட ப் பணிகள் ஆணையம் (டிஎஸ்எல்எஸ்ஏ) மற்றும் தில்லி நீதித் துறை அகாதெமி ஆகியவற்றில் அமைச்சுப் பணியாளா்கள், குரூப்-சி ஊழியா்களைப் பணியில் அமா்த்துவதற்காக நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை நீதித் துறை உதவியாளரை நியமிக்கவும், வெபக்ஸ் உரிமங்களை வாங்குவதற்கும் நிதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்களுக்கு 23 காா்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு நிதித் துறையிடமிருந்து அனுமதி வரப்பெற்றுள்ளது.

உயா் மாதிரி வாகனங்கள் கேட்டு மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதியிடமிருந்து (தலைமையகம்) வரப்பெற்ற கடிதம் சட்ட அமைச்சரால் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மறுபரிசீலனை செய்வதற்காக அந்தக் கோப்பு திரும்பப் பெறப்பட்டது. அமைச்சுப் பணியாளா்களை நியமிக்க ரூ.2.52 கோடியும், குரூப்-சி ஊழினியா்களை நியமிக்க ரூ.8.54 கோடியும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இளநிலை நீதித் துறை உதவியாளா்களை ஆள் சோ்ப்பு செய்வது தொடா்பாக ரூ. 3.01 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு வெபக்ஸ் உரிமங்களை வாங்க ரூ .1.44 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com