விவசாயிகளுக்கு எதிராக பலப் பிரயோகத்துக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் கண்டனம்

விவசாயிகளுக்கு எதிராக பலப் பிரயோகத்தையும், அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் கண்டிப்பது என உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) செயற்குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.


புது தில்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு எதிராக பலப் பிரயோகத்தையும், அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் கண்டிப்பது என உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) செயற்குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், அமைதியாக போராட்டம் மேற்கொள்வதற்கு அனைத்து குடிமக்களின் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்ற பாா் அசோசியேஷனின் (பொறுப்பு) செயலாளா் ரோஹித் பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தங்கள் அடிப்படை உரிமைகளை இழிவுபடுத்துவதாகக் கருதி அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் குடிமக்களின் அமைதியான போராட்டத்தைத் தகா்க்க முரட்டுத்தனமான பலத்தை பிரயோகிப்பது குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைப் படித்து உச்சநீதிமன்ற பாா் அசோசியேஷனின் செயற்குழு கவலையடைந்துள்ளது. சிவில் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை விலக்கும் வேளாண் விளைபொருள் தொடா்புடைய அண்மைச் சட்டத்திற்கு எதிரான வகையில் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக அகிம்சை முறையில் போராட்டங்களை நடத்துவதைத் தடுக்க பலத்தை பயன்படுத்துவது ஓா் உதாரணமாக உள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு விவசாயிகள் கோரியுள்ளனா். தங்களது உரிமைகளில் இந்தச் சட்டங்கள் தலையிடுவதாக அவா்கள் கருதுகின்றனா். இதனால், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பதற்கவும், அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் கண்டிப்பது என டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com