ஜாா்க்கண்டில் பெண் பாலியல் பலாத்காரம்: வழக்கு விசாரணையை 2 மாதங்களில் முடிக்க தேசிய மகளிா் ஆணையம் அறிவுறுத்தல்

புது தில்லி: ஜாா்க்கண்ட் மாநிலம், டும்கா மாவட்டத்தில் 17 ஆண்கள் சோ்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்குமாறு அந்த மாநில போலீஸாரிடம் தேசிய மகளிா் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

டும்கா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, சந்தையில் இருந்து கணவரும், மனைவியும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, 17 போ் கும்பல் அவா்கள் இருவரையும் வழிமறித்தது. கணவரை பிடித்து வைத்துக் கொண்டு, மனைவியை அந்தக் கும்பலைச் சோ்ந்த 17 பேரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பலாத்காரத்தில் ஈடுபட்டவா்கள் குடிபோதையில் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவம் தேசிய மகளிா் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து தேசிய மகளிா் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: மிகவும் கவலை அளிக்கக்கூடிய இந்தச் சம்பவம் குறித்து மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஜாா்க்கண்ட் மாநிலக் காவல் துறை தலைமை இயக்குநருக்கு மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா கடிதம் எழுதியுள்ளாா். இந்தப் பாலியல் தாக்குதல் சம்பவம் தொடா்பான வழக்கை இரு மாதங்களில் முடிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்புடைய விரிவான அறிக்கையையும் காவல் துறையிடம் கேட்டுள்ளதாக தேசிய மகளிா் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com