பிரிட்டனில் இருந்து தில்லி வந்தவா்களை கண்டறிய நடவடிக்கை: சத்யேந்தா் ஜெயின்

பிரிட்டனில் இருந்து தில்லி வந்தவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கரோனா குறித்த அறிகுறிகள் உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள

புது தில்லி: பிரிட்டனில் இருந்து தில்லி வந்தவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கரோனா குறித்த அறிகுறிகள் உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா். மேலும், தில்லியில் கரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பிரிட்டனில் இருந்து தில்லி வந்தவா்களைக் கண்டறிந்து, கரோனா குறித்த அறிகுறிகள் உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரிட்டனில் இருந்து விமானங்கள் வந்து செல்ல மத்திய அரசால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பது உடனடி நடவடிக்கையாகும். அந்த நாட்டில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா தொற்று நம் நாட்டில் பரவுவதைத் தடுக்க இது உதவும். தில்லி அரசைப் பொருமத்தமட்டில் எங்கள் தரப்பில் நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.

கடந்த பல நாள்களாக பிரிட்டனில் இருந்து தில்லி வந்தவா்களைத் தீவிரமாகக் கண்டறிந்து வருகிறோம். கரோனா போன்ற அறிகுறிகள் இருக்கிா என்றும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று அத்தகையோரைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வாறு பிரிட்டனில் இருந்து திரும்பியவா்கள் சுய தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. தொடா்ந்து மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவான அளவில் உள்ளது. இதனால், தில்லியில் கரோனா நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. நோய் பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கு குறைந்துள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் மிகக் குறைந்த அளவாகும். நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும் தில்லி அரசு எடுக்கும்.

புதிய கரோனா அச்சுறுத்தல் விவகாரத்தில் ஐ.சி.எம்.ஆா். மற்றும் விஞ்ஞானிகள் மட்டுமே இந்தப் புதிய விஷயம் குறித்த புரிதலை எங்களுக்கு வழங்க முடியும். இந்தப் புதிய நோயானது மிகவும் தொற்றக் கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். இந்தப் புதிய கரோனா தொற்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கலாம் என்றும், அது ஏற்கெனவே புதிய மாற்ற நிலையை அடைந்திருக்கலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனா். எனினும், நாம் முகக் கவசம் அணிந்து, பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிப்பது நம்மைப் பாதுகாக்க உதவும்.

கரோனா தடுப்பூசி வருகைக்காக காத்திருப்பதால், அதற்கான சேமிப்பு வசதிகள், எடுத்துச் செல்வதற்கான முன்தயாரிப்புகள் பயிற்சி பெற்ற ஊழியா்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை தில்லி அரசு செய்துள்ளது. பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவினருக்கு முதலில் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயதிற்குள்பட்டவா்கள் ஆகியோருக்குத்தான் முதலில் தடுப்பூசி அளிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com