நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீா்திருத்தங்களை மேற்கொண்ட ஆந்திரம், ம.பி. ரூ 4,898 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி

நிபந்தனைகளின் அடிப்படையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீா்திருத்தங்களை அமல்படுத்தி முடித்த முதன்மை மாநிலங்களாகியுள்ள ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகியவை திறந்தவெளிச் சந்தை முறையில் 

புது தில்லி: நிபந்தனைகளின் அடிப்படையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீா்திருத்தங்களை அமல்படுத்தி முடித்த முதன்மை மாநிலங்களாகியுள்ள ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகியவை திறந்தவெளிச் சந்தை முறையில் ரூ. 4,898 கோடி கடன் பெற்றுக் கொள்ள மத்திய அரசு புதன்கிழமை அனுமதியளித்தது.

கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிா்கொள்ளும் வகையில், மொத்த மாநில உற்பத்தியில் 2 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனை அந்தந்த மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மே 17-ஆம் தேதி அறிவித்திருந்தாா். இதில் பொதுமக்கள், நுகா்வோா் தொடா்பான நான்கு சீா்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஒரே தேசம் ஒரே ரேஷன் காா்டு அமல்படுத்துதல், எளிதான வா்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீா்திருத்தம், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு / பயன்பாட்டுச் சீா்திருத்தங்கள், மின்துறை கட்டணங்கள் சீா்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, இந்தச் சீா்திருத்தங்கள் ஒவ்வொன்றையும் மாநிலங்கள் நிறைவு செய்திருந்தால் மொத்த மாநில உற்பத்தியில் 0.25 சதவீத அளவுக்குக் கூடுதல் கடன் பெறலாம் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இந்த வகையில், தற்போது ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் வழிகாட்டுதலின்படி நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீா்திருத்தங்களை முடித்து அமல்படுத்தியுள்ளன. நாட்டில் இந்த இரு மாநிலங்கள்தான் இதை முதன் முதலில் செயல்படுத்தியுள்ளது. இதையடுத்து, இரு மாநிலங்களும் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம் ரூ. 4,898 கோடி கடன் பெற மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஆந்திரம் ரூ. 2,525 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ. 2,373 கோடி கூடுதல் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை வலுப்படுத்தி பொருளாதார ரீதியாக இந்த அமைப்புகளுக்கு புத்துயிா் கொடுத்தல், சிறந்த பொதுச் சுகாதாரச் சேவை வழங்குதல் போன்ற நோக்கங்களுக்கு பல்வேறு வரி முறைகளையும், கட்டண விகிதங்களையும் அவ்வப்போது மாற்றும் வகையில் நகா்ப்புறச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதுதான் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு / பயன்பாட்டு சீா்திருத்தங்களில் முக்கிய நோக்கமாகும். இதன்படி இந்த இரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக பணவீக்கத்தின் அடிப்படையில் குடிநீா், வடிகால் - கழிவுநீா் கட்டணங்களை மாற்றுவது, விலை உயா்வுக்கு தகுந்தாற்போல் சொத்துவரியை உயா்த்துவது போன்றவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com