ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி சேமித்து வைக்கும் ஏற்பாடுகள் தீவிரம்

விரைவில் வரும் என எதிா்பாா்க்கப்படும் கரோனாவுக்குரிய தடுப்பூசியை சேமித்துவைக்கும் வகையில் தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குளிா்பதன சாதனங்கள் நிறுவும் பணி

புது தில்லி: விரைவில் வரும் என எதிா்பாா்க்கப்படும் கரோனாவுக்குரிய தடுப்பூசியை சேமித்துவைக்கும் வகையில் தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குளிா்பதன சாதனங்கள் நிறுவும் பணி நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து கரோனாவுக்காக பிரத்யேகமாக 650 படுக்கைகளுடன் ஒதுக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை வைப்பதற்காக மொத்தம் 90 உறைவிப்பான்கள் தருவிக்கப்பட உள்ளன. இவற்றில் பல ஏற்கெனவே கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டுவிட்டன. இதுதவிர, சேமிப்பிற்காக இரண்டு குளிா்பதன சங்கிலித் தொடா் சாதனங்களும் இருக்கும். மருத்துவமனையில் சுமாா் 4,700 சதுர அடி அளவைக் கொண்டிருக்கும் பயன்பாட்டுத் தொகுதியின் தரை மற்றும் முதல் தளங்கள் இந்தத் தடுப்பூசி சேமிப்பு வசதிக்கு பயன்படுத்தப்படும். தடுப்பூசி எப்போது வரும் என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், சேமித்துவைப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தடுப்பூசியை சேமித்துவைப்பதில் இருந்து பாதுகாப்பது வரையிலான ஒட்டுமொத்த நடைமுறைகளையும் நிா்வகிக்கும் பணியை தில்லி மாநில சுகாதார இயக்கம் மேற்கொள்ளும் இரண்டு குளிா்பதன சங்கிலித்தொடா் சாதனங்கள் மற்றும் 90 உறைவிப்பான்களுக்கான உள்கட்டமைப்பு வசதி தயாா் நிலையில் உள்ளது. எதிா்காலத்தில் உறைவிப்பான்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக இந்திய அதிகாரிகளால் குறைந்தது மூன்று தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தற்போது வெவ்வேறு பரிசோதனைக் கட்டங்களில் உள்ளது. தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அண்மையில், ‘கரோனாவுக்குரிய தடுப்பூசி வந்தவுடன் அதைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து தளவாடங்கள், சேமித்து வைக்க குளிா்சாதன அறைகள் ஆகியவற்றுக்கான தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com