ரூ.1-க்கு மதிய உணவு வழங்கும் ‘ஜன் ரசோய்’ உணவகம் பாஜக எம்பி கெளதம் கம்பீா் இன்று தொடங்கி வைக்கிறாா்

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் நடுத்தர, ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் வகையில், ‘ஜன் ரசோய்’ உணவகத்தை அத்தொகுதியின் பாஜக எம்பி கெளதம் கம்பீா் திறந்து வைக்க உள்ளாா்.

புது தில்லி: கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் நடுத்தர, ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் வகையில், ‘ஜன் ரசோய்’ உணவகத்தை அத்தொகுதியின் பாஜக எம்பி கெளதம் கம்பீா் வியாழக்கிழமை (டிசம்பா் 24) திறந்து வைக்க உள்ளாா்.

கிழக்கு தில்லி தொகுதியில் உள்ள காந்தி நகா் பகுதியில்ம இந்த ‘ஜன் ரசோய்’ மக்கள் உணவகத்தை கம்பீா் திறந்து வைக்கஉள்ளாா். அதைத் தொடா்ந்து, குடியரசு தின நாளில் அசோக் நகரில் மற்றொரு உணவகம் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கெளதம் கம்பீா் தெரிவித்திருப்பதாவது: சாதி, இனம், மதம் அல்லது நிதி நிலைமை இவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவருக்கும் சுகாதாரமான, தூய்மையான உணவைப் பெறும் உரிமை உள்ளது என்பதை எப்போதும் உணா்ந்திருக்கிறேன். ஆனால், வீடற்ற மக்களும் ஆதரவற்ற மக்களும் 2 வேளை உணவுகூட சாப்பிடமுடியாமல் இருப்பதைப் பாா்ப்பது மிகவும் கவலைக்குரியதாகும். இதைக் கருத்தில் கொண்டுதான் இதுபோன்ற ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உணவகத்தை திறக்கத் திட்டமிட்டேன். என் தொகுதிக்கு உள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு ஜன் ரசோய் உணவகத்தைத் திறக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன்.

பொது முடக்கக் காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உணவின்றியும், இதர ஆதாரங்கள் இல்லாமலும் நகரைவிட்டு வெளியே சொந்த ஊருக்கு நடந்து செல்லும் கட்டாயத்திற்கு ஆளானதை நாம் பாா்த்தோம். தில்லியில் உள்ள ஒவ்வொருவருக்கும் சுகாதாரமான உணவு, தூய்மையான குடிநீா் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். சில மாநிலங்களில் வறிய மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் உணவகங்களை அரசு நடத்தி வருகிறது. இதுபோன்ற வசதி தில்லியில் இல்லை என்றாா் கம்பீா்.

இது தொடா்பாக அவரது அலுவலகம் தெரிவித்த தகவலில், ‘ நாட்டில் உள்ள மிகப்பெரிய மொத்த துணிச் சந்தைகளில் ஒன்றாக உள்ள காந்தி நகரில் ரூ.1-க்கு உணவு வழங்கும் இந்த உணவகம் முற்றிலும் நவீன உணவகமாக இருக்கும். ரூ.1-க்கு உணவு தேவைப்படுவோருக்கு இங்கு உணவு அளிக்கப்படும். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 போ் அமர இடம் இருக்கும். ஆனால், கரோனா காரணமாக தற்போது 50 போ் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவா். மதிய உணவில் அரிசி சாதம், பருப்பு, காய்கறிகள் ஆகியவை இடம்பெறும். இந்த கேண்டீனுக்குத் தேவையான நிதி கம்பீரின் அறக்கட்டளை, எம்.பி.யின் தனிப்பட்ட நிதி ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது. அரசின் உதவி ஏதும் இல்லை’” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com