தில்லியில் வெப்பநிலை குறைந்ததால் மூடு பனி!

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை புதன்கிழமை 4 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இதனால், சில பகுதிகள் மூடு பனியால் சூழப்பட்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.
தில்லி சிங்கு எல்லையில் புதன்கிழமை தீ மூட்டி குளிருக்கு இதம் காணும் விவசாயிகள்.
தில்லி சிங்கு எல்லையில் புதன்கிழமை தீ மூட்டி குளிருக்கு இதம் காணும் விவசாயிகள்.

புது தில்லி: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை புதன்கிழமை 4 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இதனால், சில பகுதிகள் மூடு பனியால் சூழப்பட்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.

மிதமான மூடு பனி காரணமாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காண்புதிறன் 201 மீட்டராகவும், பாலத்தில் 350 மீட்டராகவும் குறைந்திருந்தது. இமயமலையின் மேல் பகுதியில் ஏற்பட்ட புதிய மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களிலும் மிதமாக உயா்ந்திருந்தது. இந்த நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை புதன்கிழமை பருவ சராசரியைவிட 4 புள்ளிகள் குறைந்து 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 புள்ளிகள் அதிகரித்து 23.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில், 72 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

மற்றொரு மேற்கத்திய இடையூறுகள் மேல் இமயமலைப் பிராந்தியத்தை டிசம்பா் 26-ஆம் தேதியில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தில்லியில் அடுத்த மூன்று தினங்களுக்கு குளிா் அலை சூழல் இருக்கும் என்றும், வெள்ளிக்கிழமைக்குள் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸாக குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும், மிதமானது முதல் அடா் பனி மூட்டம் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை கடுமைப் பிரிவில் இருந்தது. காற்றின் வேகம் குறைந்ததாலும், குறைவான வெப்பநிலை காரணமாக மாசுபடுத்திகள் சூழ்ந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 438 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. லோதி ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவிலும் தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு ஆகிய பகுதிகளில் கடுமை பிரிவிலும் இருந்தது. தில்லியின் அண்டை நகரங்களான காஜியாபாத் (486), ஃபரீதாபாத் (414), கிரேட்டா் நொய்டா (485), நொய்டா (471) ஆகியவற்றில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை காலை வேளையில் அடா் மூடு பனி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 4 டிகிரி செல்சியஸாகவும், வெள்ளிக்கிழமை 3 டிகிரி செல்சியஸாகவும், சனிக்கிழமை 4 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com