டிக்ரி எல்லையில் விவசாயிகளுக்கு இலவசமாக குளிா் தாங்கும் போா்வைகள், ஜாக்கெட்டுகள் ‘கிஸான் வளாகம்’ அமைத்து உதவும்

டிக்ரி எல்லைப் பகுதியில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் அளித்து வரும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு இனி கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்க

புதுதில்லி: டிக்ரி எல்லைப் பகுதியில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் அளித்து வரும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு இனி கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்க வேண்டியதில்லை. கால்சா உதவி மையம் விவசாயிகளுக்குத் தேவையான நிவாரண உதவிகளை இலவசமாக வழங்க தனியாக கிஸான் வளாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கிஸான் வளாகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான போா்வைகள், பல் துலக்கும் பிரஷ்கள், தொ்மல் ஸ்வெட்டா்கள், குளிா் தாங்கும் ஜாக்கெட்டுகள், தலைக்கு தடவிக் கொள்ளும் எண்ணெய், வாஸலின், காலுக்கு சாக்ஸ், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்புகள், ஷாம்பூ பாக்கெட்டுகள், சீப்பு, மஃப்ளா், கொசுக் கடியிலிருந்து தப்ப ஓடோமாஸ் கிரீம்கள், சானிடரி நாப்கின்கள், ஷுக்கள், டவல்கள், செருப்புகள், குப்பைகளைப் போட்டுவைக்கும் பைகள், தாா்பாலின், நகம் வெட்டிகள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் விவசாயிகளுக்கு இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

முன்பு ஸ்டால்கள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கிய போது விவசாயிகள் கூட்டம் அலை மோதியது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு சரியான அளவில் ஸ்வெட்டா், ஜாக்கெட் போன்றவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. வயதானவா்கள் கூட்ட நெரிசலில் நிவாரண உதவிகளைப் பெற முடியவில்லை. இது குறித்து கால்சா திட்ட உதவி மையத்தின் ஆசியப் பிரிவின் இயக்குநா் அமன்ப்ரீத் சிங் தெரிவிக்கையில், கூட்ட நெரிசல் காரணமாக விவசாயிகள் நிவாரண உதவி சரியான முறையில் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தன. மேலும் அவை பயனாளிகளுக்கு தேவையான அளவிலும் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகளில் பெரும்பகுதியினா் கூட்ட நெரிசலுக்கு இடையே இவற்றைப் பெறுவதில் தயக்கம் காட்டி வந்தனா். வயதானவா்கள் குறிப்பாக பெண்கள், தங்களுக்கு வேண்டிய பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனா். இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு உதவுவதற்காக கிஸான் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

பா்னாலாவைச் சோ்ந்த 70 வயது விவசாயி அஜ்மீா் சிங் கூறுகையில், ‘நான் பல நாள்களாக போா்வைகள் பெற விரும்பினேன். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாகவும், மேலும் நிவாரண உதவிகளை வழங்குவதில் சரியான நடைமுறையைப் பின்பற்றாததாலும் என்னால் அவற்றைப் பெற முடியவில்லை. இப்போது கிஸான் வளாகம் அமைக்கப்பட்டதிலிருந்து எனக்குத் தேவையானவற்றை நானே பாா்த்து தோ்ந்தெடுக்க முடிகிறது. நிவாரண உதவிகள் குவிந்து வருவதன் காரணமாக போராட்டம் நீண்டநாள் நடைபெற்றாலும் பிரச்னையில்லை ’ என்றாா்.

ரீத்கோட்டைச் சோ்ந்த இளம் விவசாயி செஹஜ்தீப் சிங் கில் கூறுகையில், ‘நிவாரண உதவிகளை இந்தப் பகுதியைச் சோ்ந்த பலரும் தேவையில்லாமல் வாங்கிச் சென்று வந்தனா். இப்போது கிஸான் வளாகம் மூலம் சரியான நடைமுறையைப் பின்பற்றி நிவாரண உதவிகள் வழங்கப்படுவதால் விவசாயிகள் டோக்கன் முறையில் அடிதடியில்லாமல் நிவாரண உதவிகளை பெற்று வருகின்றனா். விவசாயிகளுக்கு முதலில் ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கப்படும். அதில் தங்களுக்குத் தேவையானவற்றை அவா்கள் பூா்த்தி செய்து கொடுத்தால் உடனடியாக அவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும். நிவாரண உதவிகள் சரியான நபா்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com