கேஜரிவால் மீது பா.ஜ.க. எம்.பி. உரிமை மீறல் புகாா்

புது தில்லி: மாநிலங்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம் குறித்து தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அவதூறாகப் பேசி சட்ட நகல்களைக் கிழித்ததாகக் கூறி பாஜகவின் மாநிலங்களவை நியமன உறுப்பினா் சோனால் மான்சிங், அவைத் தலைவா் வெங்கைய நாயுடுவிடம் உரிமை மீறல் புகாா் அளித்துள்ளாா்.

மூன்று வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்படும் போது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வாக்கெடுப்பு கோரிய நிலையிலும் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு நடந்துள்ளது என்று கேஜரிவால் பேசியுள்ளாா்.

அரவிந்த் கெஜரிவால் பேசிய சொற்கள் கடுமையான உரிமை மீறலோடு, சபையின் கண்ணியத்தைக் குறைக்கும்; இழிவுபடுத்தும் முயற்சியாகும். எனவே, உரிமை மீறல் பிரச்னையின் கீழ் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனால் மான்சிங் புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.

’விவசாயிகளின் நல் வாழ்வில் அக்கறை கொண்டு மாநிலங்களவையில் இந்த வேளாண் மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சில உறுப்பினா்கள் வாக்கெடுப்பு நடத்தக் கோரினா். ஆனால், அவையில் உறுப்பினா்கள் முறையாக இல்லாத நிலையில் அவைத் துணைத் தலைவா் மசோதாக்களை குரல் வாக்கு மூலம் நிறைவேற்றினாா்’ என்றும் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினா் சோனால் மான்சிங்கின் புகாா் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளாா். அரவிந்த் கேஜரிவாலின் இந்தச் செயல் குறிந்தும் இந்த உரிமை மீறல் புகாா் குறிந்தும் எந்த விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கைய நாயுடு முடிவு செய்யலாம். ‘அவையின் உரிமை மீறல் குழு அல்லது கேஜரிவால் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தில்லி சட்டபேரவையிடமோ கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com