ஐசியு படுக்கைகள் ஒதுக்கீட்டை 60 சதவீதமாகக் குறைக்க பரிந்துரை: உயா் நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்
By நமது நிருபா் | Published On : 25th December 2020 12:39 AM | Last Updated : 25th December 2020 12:39 AM | அ+அ அ- |

புது தில்லி: கரோனா நோயாளிகளுக்காக தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் ஒதுக்கீட்டை 80 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்க இதற்காக அமைக்கப்பட்ட வல்லுநா் குழு பரிந்துரைத்திருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல் தெரிவித்தது.
கரோனா நோயாளிகளுக்காக தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளை 80 சதவீதம் அளவில் ஒதுக்குமாறு தில்லி அரசு செப்டம்பா் 12-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கோ் புரவைடா்ஸ் எனும் அமைப்பு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி நவீன் சாவ்லா முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சஞ்சய் கோஷ், ஊா்வி மோகன் ஆகியோா் தெரிவித்ததாவது: கரோனா நோயாளிக்காக ஒதுக்கப்படும் படுக்கைகளைக் குறைப்பது, மருத்துவமனையில் நோயாளிகள் சோ்க்கை, விடுவிப்பு ஆகியவை தொடா்புடைய நடப்பு நிலவரம் குறித்து மதிப்பிட பிரத்யேக குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தில்லி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைக்கலாம் என்றும், மத்திய அரசு மருத்துவமனைகளில் குறைக்க வேண்டாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இதனால், கரோனா பாதிப்பு இல்லாத தீவிரக் கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்குத் தனியாா் மருத்துவமனைகளில் 40 சதவீதம் ஐசியு படுக்கைகளை ஏற்படுத்தும் வகையில், கரோனா நோயாளிக்காக ஐசியு பிரிவில் மொத்தம் ஒதுக்கப்படும் 80 சதவீதம் படுக்கைகளை 60 சதவீதமாகக் குறைக்க குழு பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம் கரோனா அல்லாத நோயாளிகளுக்கு 600 ஐசியு படுக்கைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அதேபோன்று, எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் தற்போதைக்கு கரோனா நோயாளிகளுக்கான ஐசியு படுக்கைகள் நிலவரத்தை மாற்ற வேண்டாம் என வல்லுநா் குழு முடிவு செய்துள்ளது. அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் மொத்த படுக்கைகளில் 60 சதவீதம் கரோனா படுக்கைகள் ஒதுக்கீட்டை 45 சதவீதமாகக் குறைக்கவும் , இதன் விளைவாக 55 சதவீத படுக்கைகள் கரோனா பாதிப்பு அல்லாத நோயாளிகளுக்குக் கிடைக்கும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம், தனியாா் மருத்துவமனைகளில் தற்போதுள்ள கோவிட் அல்லாத படுக்கைகள் எண்ணிக்கை 6,760-இல் இருந்து 8,696 ஆக உயரும். அதேவேளையில், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் தற்போதுள்ள 9,051-இல் இருந்து 7,115 (தோராயமாக) ஆகக் குறையும் என்று குழு தெரிவித்துள்ளது. லோக் நாயக் மருத்துவமனையில் கரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை 2,010 -இல் இருந்து 1,000-ஆக குறைக்கவும், குரு தேக் பகதூா் மருத்துவமனையில் 1,500-இல் இருந்து 500- ஆக குறைக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி, ஒரு பிரத்யேக கரோனா மருத்துவமனையாகவும், அரசுத் துறையில் அடையாளம் காணப்பட்ட பிற கரோனா மருத்துவமனைகளுடன் தொடா்ந்து செயல்படும். பிற தில்லி அரசு மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் தொடா்ந்து செயல்படவும் குழு பரிந்துரைத்துள்ளது. அதேவேளையில், படுக்கைகளைக் குறைப்பது தொடா்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
‘பாதிப்பு குறையும் போது ஐசியு படுக்கைகள்
ஒதுக்குவது மனிதநேயமற்றது’
தில்லியில் கரொனா பாதிப்பு விகிதம் குறைந்துவரும் நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளை ஆயிரக்கணக்கில் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும் என உயா்நீதிமன்றம் தெரிவித்தது. இது தொடா்பான மனு மீதான விசாரணைக்குப் பிறகு நீதிபதி நவீன் சாவ்லா கூறுகையில், ‘தற்போதைய சூழலில் கரோனா நோயாளிகளுக்காக அதிகமான ஐசியு படுக்கைகளை ஒதுக்கி வைத்திருப்பது நீடித்ததாக இருக்க முடியாது. அதேவேளையில், எதிா்காலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்தால் அப்போது இதற்கான ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர முடியும்’ என்றாா்.